]]

Saturday, July 7, 2007

குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றச்சாட்டு அடுக்காதீர்கள்

குறிப்பிட்ட சமூகத்தின் மீது குற்றச்சாட்டு அடுக்காதீர்கள்
பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

'குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போனால், அது புதிய பிரச்னைகளைத் தான் உருவாக்கும். பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுனுடன் போன் மூலம் பேசியுள்ளேன்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


டில்லியில் நேற்று பெண் பத்திரிகையாளர்கள் சிலர், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினர். அப்போது, இந்த தகவலை பிரதமர் மன்மோகன் வெளியிட்டார். மேலும், விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.


தொடர்ந்து அவர் கூறியதாவது:

ஒரு நாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தை தவறானவர்கள் என்று முத்திரை குத்தும் போக்கு தவறானது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே போனால், அது புதிய பிரச்னைகளைத் தான் உருவாக்கும்.

தவறு செய்பவர்களை முஸ்லிம்கள் என்றோ, முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்றோ கூறக்கூடாது. பிரச்னைக்குரிய தீர்வை புரிந்து கொள்ளவோ, சமாளிக்கவோ அது உதவாது. இந்தியர் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்து இருக்கிறார் என்று தெரிய வந்தால், அனைத்து இந்தியர்களும் அது போலத் தான் என முடிவு செய்து விட முடியாது.

பயங்கரவாதி என்பவன் பயங்கரவாதி தான். அவனுக்கு மதமோ, சமூகமோ கிடையாது. இளைஞர் ஒருவர் தவறாக வழி நடத்திச் செல்லப்படுவது எந்த சமூகத்திலும் நடக்கலாம். இது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு உரியது என கூறி விட முடியாது. அது போல, முத்திரை குத்துவதால் ஏற்படும் வேதனையை ஒரு சீக்கியராக நான் உணர்ந்துள்ளேன்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

0 comments: