]]

Wednesday, July 4, 2007

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா? குறை தீர்ப்பு கூட்டத்தில் குமுறல்

முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா?
குறை தீர்ப்பு கூட்டத்தில் குமுறல்


முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி மற்றும் புத்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்களின் குறை கேட்புக் கூட்டம் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் நேற்று காலை நடந்தது.


சென்னை கலெக்டர் ஜெயா, தேசிய சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் அன்சாரி மற்றும் ஐந்து ஆணைய உறுப்பினர்கள், தமிழக அரசின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈமான் தமிழ் இலக்கிய பேரவையின் தலைவர் கமுதி பஷீர் :

முஸ்லிம் மதத்தில் தலித் முஸ்லிம் என்ற பிரிவே இல்லை. தமிழக அரசின் இலவச திட்டங்களால் முஸ்லிம்களுக்கு எவ்வித பயனும் இல்லை. இலவசங்களுக்கு பதிலாக இடஒதுக்கீடு வழங்கினாலே போதும்.

தமிழக காங்கிரஸ் மாநில அமைப்பு செயலர் ஹயாத்கான் :

வக்பு வாரியத்துக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அரசியல்வாதிகள், சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களை மீட்க பல முறை தேசிய சிறுபான்மை நல ஆணையத்திடமும், வக்பு வாரியத்திலும் மனு கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை.

வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி:

முஸ்லிம்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றிருந்தால் திருவல்லிக்கேணி அல்லது இளையாங்குடி தொகுதியை வழங்கி இருக்க வேண்டும். வக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். அதை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. காரணம், பாதி சொத்துக்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

கூட்டத்தில் வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களின் குறைகளை எடுத்துரைத்தனர்.

"முஸ்லிம் இனத்தவர்கள் என்றாலே பயங்கரவாதிகள் போல பார்க்கும் நிலை மாறவேண்டும். அயோத்தி முதல் ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் வரை இதே நிலைதான் இருந்து வந்துள்ளது,' என்று முஸ்லிம் இனத்தவர்கள் சார்பில் எடுத்துரைத்தனர்.

இக்குறைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணைய தலைவர்கள் தெரிவித்தனர்.

0 comments: