]]

Wednesday, July 4, 2007

ரெயில்வே டிக்கெட் முன்பதிவில் திடீர் மாற்றம்

ரெயில்வே டிக்கெட் முன்பதிவில் திடீர் மாற்றம்
90 நாட்கள் வரை எடுக்கலாம் என்பது 60 நாட்களாக குறைப்பு

90 நாட்கள் வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது. இனிமேல், ஏற்கனவே இருந்ததுபோல 60 நாட்களுக்கு முன்னதாகத் தான் முன்பதிவு செய்ய முடியும்.

3 மாதத்திற்கு முன்பு அறிமுகம்

ரெயில்வே துறையில் லாபம் ஈட்ட மந்திரி லல்லு பிரசாத் யாதவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த அடிப்படையில் 60 நாட்களுக்கு முன்னதாக வரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இருந்ததை 90 நாட்களுக்கு முன்னதாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரெயில்வே துறை அறிவித்தது.


இந்த புதிய முறை கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த புதிய திட்டத்திற்கு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இதற்கு எதிராக ரெயில்வே துறை முடிவு எடுத்துள்ளது.


90 நாட்கள் வரை டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை திரும்ப பெறப்பட்டு உள்ளது. ஜுலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பருவமழை காலம் என்பதால் ரெயில் டிக்கெட் முன்பதிவு மந்தமாக இருக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் இதற்கு காரணம் கூறுகின்றனர்.


ஆனால், உண்மையான காரணம் வேறுவிதமாக இருக்கிறது. 90 நாட்களுக்கு முன்னதாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் திட்டத்தின் மூலம் ரெயில்வே துறைக்கு அதிக லாபம் கிடைக்கும் என்று ரெயில்வே மநதிரி லல்லு பிரசாத் யாதவ் கணக்கிட்டார். ஆனால், அதன்படி லாபம் வராததால் இந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

14-ந் தேதி வரை

டிக்கெட் முன்பதிவு மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.450 கோடி வருவாய் கிடைத்தது. மார்ச் 1-ந் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 90 நாட்களாக நீட்டிக்கப்பட்ட பிறகு, டிக்கெட் முன்பதிவு மூலம் சில கோடி ரூபாய் அதிகரித்தது. இந்த வருமானம் ரெயில்வே துறை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.


இதன் காரணமாக 90 நாட்களுக்கு முன்னதாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை ஜுலை 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதுவரை ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் அதன்படியே ரெயிலில் பயணம் செய்யலாம்.


ஜுலை 15-ந் தேதிக்கு பிறகு ஏற்கனவே இருந்தது போல 60 நாட்களுக்கு முன்னதாக வரை தான் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.


பண்டிகை காலத்தில்...

ஆனால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஓராண்டுக்கு முன்னதாகவே ரெயில் முன்பதிவு டிக்கெட் வாங்கிக் கொள்ளும் முறைக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோடை விடுமுறை, தீபாவளி, ரம்ஜான், கிஸ்துமஸ் போன்ற திருவிழா காலங்களில் மட்டும் தான் பயணிகள் 90 நாட்களுக்கு முன்னதாக ரெயில் முன்பதிவு டிக்கெட் பெறுகின்றனர். சாதாரண காலங்களில் 2 வாரங்களுக்கு முன்னர்தான் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். இதன் காரணமாகவும் 60 நாட்களுக்கு முனëனதாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.


பயணிகள் வசதிக்காக...


முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள கணினி முன்பதிவு மையங்களில் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. ஆன்-லைன், இ-டிக்கெட்டிங் முறையிலும் முன்பதிவு டிக்கெட் பெறலாம். கணினி முன்பதிவு மையங்களில் கூட்டம் அலைமோதுவதால் முக்கிய ரெயில் நிலையங்களில் ஏ.டி.எம். மூலமும், தபால் நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ரெயில் முன்பதிவு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், ரெயில் முன்பதிவு டிக்கெட் எடுப்பதற்கான கால அளவை 90 நாட்களில் இருந்து 60 நாட்களாக மீண்டும் குறைத்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

ரெயில்வே துறையின் வருவாயை கணக்கிடாமல் பயணிகளின் வசதியை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

1 comments:

said...

உங்கள் பதிவை ஃபயர் பாக்ஸில் படிக்க முடியவில்லை.கொஞ்சம் பாருங்க.பத்தியின் தலைப்பு மாத்திரம் சரியாக தெரிகிறது.