]]

Wednesday, July 4, 2007

வழிகாட்டிகளுக்கான (கைடு) சிறப்பு பயிற்சி - சுற்றுலாத் துறையில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு

வழிகாட்டிகளுக்கான (கைடு) சிறப்பு பயிற்சி
சுற்றுலாத் துறையில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு


சுற்றுலாத்துறையில் சுய வேலைவாய்ப்பு அடிப்படையில், 400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய வகையில், சுற்றுலா வழிகாட்டிகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் மூ.ராஜாராம் தெரிவித்தார்.

இது பற்றி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குநரும், நிர்வாக இயக்குநருமான மூ.ராஜாராம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சுற்றுலாச் செல்வங்கள்


தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள், அழகிய கடற்கரைகள், வனவிலங்கு சரணாலயங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள், மலைப்பிரதேசங்கள் ஆகிய சுற்றுலா செல்வங்களைக் காண ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

2006-ம் ஆண்டில் 3 கோடியே 92 லட்சத்து 14 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும், 13 லட்சத்து 35 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றுள்ளனர்.

அன்னிய செலாவணி

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டில் தங்கிச் செல்லும் கால அளவு சராசரியாக 4 நாட்களில் இருந்து 5 நாட்கள் ஆகும். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 7 நாட்கள் வரை தங்கிச் செல்கிறார்கள். இவ்வாறு தங்கிச் செல்லும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் செலவிடும் தொகை நாள் ஒன்றுக்கு 711 ரூபாய். வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் செலவிடும் தொகை 2 ஆயிரத்து 252 ரூபாய். இதன் மூலம் தமிழ்நாடு 2006-ம் ஆண்டில், அந்நியச் செலாவணிக்கு 3 ஆயிரத் 20 கோடி ரூபாய் பங்களித்து உள்ளது.


இந்த நிலையில் சுற்றுலாப் பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரியான தகவல்களை எடுத்துக் கூற போதுமான அளவில் தற்போது சுற்றுலா வழிகாட்டிகள் இல்லை.


400 பேருக்கு வேலைவாய்ப்பு

எனவே, 400 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.


இதன்படி, முதல்கட்டமாக 184 பேருக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையம் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான சென்னை, மாமல்லபுரம், மதுரை, கன்னியாகுமரி, உதகமண்டலம், தஞ்சாவூர் சுற்றுலா வழிகாட்டிகளாக செயல்படுவார்கள். (சுய வேலைவாய்ப்பு அடிப்படையில்)


பயிற்சி


முதல்கட்ட பயிற்சி 34 பேர்களுக்கு 11-7-2007 அன்று சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மைநிலைய கூட்ட அரங்கில் சுற்றுலாத் துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.


பயிற்சி காலம் 10 நாட்கள். இத்துடன் களப்பணி 3 நாட்கள். இதற்கு பிறகு மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சுற்றுலா வழிகாட்டி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு...

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம்,

2, வாலாஜா சாலை,
சென்னை-600 002
தொலைபேசி எண்கள் 25383333, 25384444, 25389857.

மேற்கண்டவாறு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் மூ.ராஜாராம் கூறி உள்ளார்.

0 comments: