]]

Sunday, July 22, 2007

கடலூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வராமல் இருக்க 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி

கடலூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வராமல் இருக்க 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி

கடலூர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் வராமல் இருக்க 8 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போட மாவட்ட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


மூளைக்காய்ச்சல்


மூளைக்காய்ச்சல் நோய் கொசுக்கள் மூலம் பரவும் ஒரு கொடிய நோய் ஆகும். இந்த வகை நோயினால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நோயை ஒழிப்பதற்கான பல்வேறு வகையான கொசு தடுப்பு முறை மற்றும் நோய் தாக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சைகளை தமிழக அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


மேலும் இந்த நோயின் தாக்கத்தை குறைப்பதற்கு நிரந்தர முறையான மூளைக்காய்ச்சல் நோய் தடுப்பூசிகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள 1 முதல் 15 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.


நோயின் நிலை


மூளைக்காய்ச்சல் நோயின் தாக்கம் கடலூர் மாவட்டத்தில் சுமார் 25 ஆண்டுகளாக காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆகும். இவற்றினால் ஏற்பட்ட இறப்பு 24 ஆகும்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீர் காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, மயக்கம் மற்றும் கழுத்து இறுக்கம், இழுப்பு, நினைவு தடுமாற்றம், நிரந்தர நினைவு இழப்பு ஆகியவை ஏற்படும்.

இந்நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகளில் சுமார் 25 சதவீதம் இறப்பும் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரையிலான குழந்தைகளுக்கு நிரந்தர ஊனமும் ஏற்படும். நோயின் தாக்கம் 1 முதல் 15 வயதுள்ள குழந்தைகளிடமே அதிகமாக காணப்படுகிறது.


நோய் பரவும் முÛமூளைக்காய்ச்சல் நோய் கொசுக்கள் மூலம் பரவும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் ஆகும்.

இவ்வகையான வைரஸ் கிருமிகள் கொக்கு, நாரை, வாத்து போன்ற பறவைகளிடம் இருந்து பன்றிகளும், மனிதர்களுக்கும் அல்லது பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் கொசுக்கள் மூலம் பரப்பப்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவருக்கு பரவாது.


இந்த நோயை பரப்பும் கொசுக்கள் பொதுவாக வயல் வெளிகளில் பெருக்கம் அடைந்து, கரும்பு வயலில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை, முதிர்ந்த கொசுக்களை பூச்சிகொல்லி மருந்து தெளிப்பு மற்றும் புகைமருந்து அடித்தல் மூலம் கட்டுப்படுத்தலாம்.

மேலும் நோய் தாக்கியவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நோய் தடுப்பூசி முகாம்

மாவட்டத்தில் உள்ள 1 முதல் 15 வயதுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஜுலை 16-ந் தேதி முதல் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக சுமார் 15 தினங்களுக்கு ஒரே தவணையில் அனைத்து கிராமங்கள் மற்றும் நகரம் தோறும் முகாம் அமைத்து தடுப்பூசி அளிக்கப்படுகிறது.

இந்த முகாம்கள் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படுகிறது.


இதற்காக மாவட்டம் முழுவதும் 192 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் இரண்டு கிராம சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர், ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர் மற்றும் தன்னார்வளர் போன்ற 5 நபர்கள் கொண்டதாக இருக்கும்.

இவற்றில் கிராம சுகாதார செவிலியர் ஒவ்வொருவரும் தினமும் அதிகபட்சமாக 150 குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட ஆவன செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி அளிப்பதன் தரம் உறுதி செய்யப்படுகிறது.


சீனாவில் இருந்து இறக்குமதி


மூளைகாய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும். இது உலக சுகாதார நிறுவனத்தாலும் இந்திய அரசாலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட தரமான தடுப்பூசி ஆகும்.

இவற்றை பல உலக நாடுகள் பயன்படுத்தி அதன் மூலம் மூளைக்காய்ச்சல் நோயினை கட்டுப்படுத்தி நிரந்தர தீர்வு கண்டு உள்ளன. இந்த தடுப்பூசி ஒரு முறை பெற்றவர்கள் இந்நோய் வராமல் தங்கள் வாழ்நாள் முழுவதும் முழுமையான பாதுகாப்பை பெறுகின்றனர்.

இந்த முகாமில் சுகாதார துறையோடு கல்வித்துறை, சத்துணவுத்துறை, சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அனைத்து துறை மற்றும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் இணைந்து பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1 முதல் 15 வரையிலான சுமார் 8 லட்சத்து இருபதாயிரம் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு கடலூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

0 comments: