]]

Sunday, July 22, 2007

பரங்கிப்பேட்டையில் ரூ.9 கோடியில் வெள்ளாற்று பாலம் கட்டும் பணி




பரங்கிப்பேட்டையில் ரூ.9 கோடியில் வெள்ளாற்று பாலம் கட்டும் பணி தொடங்குவது எப்போது?


- தினத்தந்தி கேள்வி

பரங்கிப்பேட்டையில் ரூ.9 கோடியில் வெள்ளாற்று பாலம் கட்டும் பணி எப்போது தொடங்கும் என்று பொதுமக்கள் எதிர் பார்த்துள்ளனர்.

வெள்ளாறு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கும்,கிள்ளை பேரூராட்சிக்கும் இடையே பெரிய வெள்ளாறு ஓடுகிறது.

இந்த வெள்ளாறு வழியாக தான் முக்கிய வாய்க்கால் சேர்ந்து கடைசியில் கடலுக்கு தண்ணீர் செல்கிறது.இந்த ஆறு 20 அடி ஆழம் கொண்டதாக உள்ளது.

கிள்ளை,பரங்கிப்பேட்டை ஆகிய பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் பரங்கிப்பேட்டையில் உள்ள மீனவர்கள், பொதுமக்கள் கிள்ளைக்கு வர வேண்டும் என்றால் படகு, தோணி மூலமாக தான் வர முடியும்.

இது தவிர பு.முட்லூர், புவனகிரி, மணலூர், வண்டிகேட் தாண்டி சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றி தான் கிள்ளைக்கு வர வேண்டும்.

பொதுமக்கள் அவதி

இதனால் கால தாமதமும், வீண் செலவும் ஏற்பட்டு வருகிறது. கிள்ளை, பரங்கிப்பேட்டை மீனவர்களும் தங்கள் மீன்களை விற்பனை செய்ய மிக சிரமம் அடைந்து வருகின்றனர்.


மேலும் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள ஏராளமான மாணவர்கள் சிதம்பரத்தில் தான் வந்து படிக்கின்றனர்.



பரங்கிப்பேட்டையில் இருந்து கிள்ளை வெள்ளாற்றின் மூலம் படகு வழியாக வந்தால் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் தான். இந்த வழியாக தான் படகில் மாணவர்கள் கிள்ளை வந்து சிதம்பரம் செல்கின்றனர்.


மழைக்காலங்களில் இந்த வெள்ளாற்றில் கட்டுக்கடங்காத வெள்ளம் கரைபுரண்டு ஓடும். அப்போது இந்த பகுதி மக்கள், மாணவர்கள் படகில் செல்ல முடியாது.



அப்படி மீறி சென்றால் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுமோ என்று உயிரை பணயம்வைத்து படகில் வருவார்கள்.

ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு


இப்படி தொடர்ந்து அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதற் கிடையில் அப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் பாலம் ஒன்று கட்டித் தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர்.



அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ககன்தீப் சிங் பேடி, பரங்கிப்பேட்டை, கிள்ளையை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் பாலம் கட்ட மத்திய அரசு ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார்.


இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

நடவடிக்கை


இருப்பினும் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காரணம் அந்த அறிவிப்போடு மட்டும் உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் எதுவும் இது வரை நடக்க வில்லை.


இதனால் பாலம் கட்டும் பணி நடக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு வெள்ளாற்றில் பாலம் கட்டும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


அவர்களின் ஆசை நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்போம்.

0 comments: