]]

Saturday, July 7, 2007

அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் குடிதண்ணீரை பரிசோதிக்கும் கருவி

கடலூர் மாவட்டத்தில் 'அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் குடிதண்ணீரை பரிசோதிக்கும் கருவி வழங்கப்படும்'
கலெக்டர் ராஜேந்திர ரத்னூ பேச்சு

கடலூர் மாவட்டத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் குடி தண்ணீரை பரிசோதிக்கும் கருவி வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ கூறினார்.


விழிப்புணர்வு கூட்டம்


தேசிய ஊரக குடிநீர் பற்றி அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி மன்ற கூடத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர் தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் 198 பஞ்சாயத்துகளில் ஆழ்குழாய் கிணறுகளில் குடிநீர் பரிசோதனை செய்யப்பட்டது. குடிநீர் பரிசோதனையை செய்ய மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர், ஆசிரியர், அங்கன்வாடி பணியாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் கூட்டாக இணைந்து செயல்படுவார்கள்.

குடி தண்ணீரில் உள்ள வேதியியல் மாற்றம், கிருமிகள் போன்றவை கண்டறியப்படும். பொது மக்களுக்கு ஏற்படும் நோய்களில் 80 சதவீதம் குடி தண்ணீர் மூலம் தான் வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 682 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 101 பஞ்சாயத்துகளுக்கு குடி தண்ணீரை பரிசோதனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பஞ்சாயத்துகளுக்கும் விரைவில் குடி தண்ணீரை பரிசோதிக்கும் கருவி வழங்கப்படும். இதற்காக ரூ.14 லட்சத்து 42 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


198 பஞ்சாயத்துக்களில் குடிநீர் சோதனை நடத்தியதில் 86 பஞ்சாயத்துகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீரின் தன்மை மாறியது கண்டறியப்பட்டது. நீரின் தன்மை மாறிய கிணறுகளில் உள்ள குடிநீரை குடிக்காமல் விழிப்புணர்வை ஏற்படுத்த தண்ணீர் குடிக்கத்தக்கதல்ல என்று எழுதிவைக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ கூறினார்.

கூட்டத்தில் தேசிய ஊரக குடிநீர் தர நிர்ணய கண்காணிப்பு நிர்வாகப் பொறியாளர் எஸ். வெங்கடேசன், சுகாதார உதவி இயக்குனர் மீரா, உதவி நீர் ஆய்வாளர் சிதம்பரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் உதவி நிர்வாகப்பொறியாளர் அமல்ராஜ் நன்றி கூறினார்.

0 comments: