]]

Saturday, July 28, 2007

எட்டு மாவட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

எட்டு மாவட்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டம்

கல்வியில் நல்ல முன்னேற்றத்தை காணாத விழுப்புரம், தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வி தரத்தில் தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ள நிலை காணப்படுகிறது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களின் கல்வித் தரம் கடந்த காலங்களில் குறைவாக இருந்தது.

நடந்து முடிந்த பள்ளி பொதுத் தேர்வுகளில், இந்த மாவட்டங்களும் கணிசமான முன்னேற்றத்தை கண்டுள்ளன. எனினும், தென் மாவட்டங்கள் அளவிற்கு வளர்ச்சியை பெறவில்லை.


அதனால், விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுடன் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்கள் சேர்த்து மொத்தம் எட்டு மாவட்டங்களில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டம் வகுத்துள்ளது.

பாட வாரியாக சிறப்பு வினாவங்கி புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், பாடம் கற்பித்தலில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வினாவங்கி புத்தகங்கள் உள்ளிட்ட குறிப்புகள், எட்டு மாவட்டங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. சிறப்பு பாடக் குறிப்புகள், வினாவங்கி புத்தகங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0 comments: