]]

Saturday, July 28, 2007

ஜீவனாம்சம் பெற முடியாத முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்கம் துவக்கம்

ஜீவனாம்சம் பெற முடியாத முஸ்லிம் பெண்களுக்கு உதவும் சங்கம் துவக்கம் *சிறுபான்மையினர் கழக தலைவர் தகவல்

ஜீவனாம்சம் பெற முடியாத முஸ்லிம் பெண்களுக்காக உதவும் சங்கம் துவங்கப்பட உள்ளதாக சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

"முஸ்லிம், கிறிஸ்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறுதொழில் துவங்க ரூ. ஒரு லட்சம் வரை கடனாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ. ஒரு கோடி கடன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு ரூ.1.25 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்தை அந்தந்த கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 378 பேர் பயனடைந்துள்ளனர்.


மாநில அளவில் சிறுபான்மையினர் பயன்பெற 48 விதமான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக அரசு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


முஸ்லிம் பெண்கள் விவாகரத்து பெற்றால் அவர்களுக்கு ஜீவனாம்சம் கிடைக்க வசதியாக முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் துவங்கப்பட உள்ளது. இச்சங்கத்தின் தலைவராக கலெக்டர் இருப்பர். ஒன்பது பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர்.


நன்கொடை வசூலித்தும் சங்க நிதி வருவாயை பெருக்கிக் கொள்ளலாம். எந்த அளவு நன்கொடை வசூலிக்கிறார்களோ அதே அளவு தொகையை அரசு மானியமாக வழங்கும். தொகை பாங்க்கில் டெபாசிட் செய்யப்பட்டு விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள், கணவனை இழந்தவர்களுக்கு இந்த நிதியிலிருந்து உதவி செய்யப்படும்.

நலிந்த முஸ்லிம் பெண்களுக்கு சங்க நிதியிலிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான பயனாளிகளை சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்வர்.

இவ்வாறு சேவியர் அருள் ராஜ் கூறினார்.

0 comments: