]]

Wednesday, July 18, 2007

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை உதவித்தொகை உயர்வு

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை உதவித்தொகை உயர்வு

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, மாணவர்களுக்கு வழங்கி வரும் படிப்பு உதவித்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.

மேலும், நடப்பாண்டில் கூடுதலாக 50 புதிய மாணவர்களை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அறக்கட்டளையின் நிர்வாகக் குழு கூட்டம், அதன் தலைவரும், கவர்னருமான பர்னாலா தலைமையில் ராஜ்பவனில் நடந்தது.

மீனா முத்தையா, சரோஜினி வரதப்பன், எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு வழங்கி வரும் படிப்பு உதவித் தொகையை, நடப்பு கல்வியாண்டில் இருந்து (2007 - 08) உயர்த்தி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, இளங்கலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு மூன்றாயிரத்து 500 ரூபாயிருந்து நான்காயிரம் ரூபாயும், முதுநிலை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு நான்காயிரம் ரூபாயிலிருந்து நான்காயிரத்து 500 ரூபாயும், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நான்காயிரத்து 500 ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்த கல்வி உதவித் தொகையை, ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் மாணவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

கடந்த கல்வியாண்டில் புதிதாக 300 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நடப்பாண்டில் மேலும் 50 மாணவர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுவர். இதன் மூலம் மொத்தம் 952 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

இந்த கல்வி உதவித் தொகையை மாணவர்கள் பெற, பெற்றோர் அல்லது பாதுகாவலரின், ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

முதலாம் ஆண்டில் படிப்பு உதவித்தொகை பெற்ற மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால், தொடர்ந்து படிப்பு உதவித்தொகை வழங்கப்படும். படிப்பு முடியும் வரை கல்வி உதவித் தொகையை பெறலாம்.


உதவித் தொகையை பெற விரும்பும் முதலாம் ஆண்டு மாணவர்கள், "கவுரவ செயலர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராஜா அண்ணாமலை பில்டிங் (இணைப்பு), இரண்டாவது தளம், எண் 18/3 ருக்மினி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை-8'' என்ற முகவரிக்கு சுய விலாசமிட்ட உறையை (10 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டியது) அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இன்ஜினியரிங், டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்று இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள், ஆகஸ்ட் முதல் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்டோபர் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

0 comments: