]]

Wednesday, July 18, 2007

ராமச்சந்திரா பல்கலையில் புதிய பிஎச்.டி., படிப்புகள்

ராமச்சந்திரா பல்கலையில் புதிய பிஎச்.டி., படிப்புகள்

"போரூர் ராமச்சந்திரா பல்கலையில் "ஒருங்கிணைந்த'' மற்றும் "இரண்டு ஆய்வு நிலையங்களில் செயல்படும் பிஎச்.டி., திட்டங்கள்'' அறிமுகப்படுத்தப் படுகிறது,'' என்று சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தரும், ராமச்சந்திரா பல்கலைக் கழக ஆய்வு இயக்குனர் மற்றும் தலைமை ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பல்கலைக் கழக மானியக் குழு ஆகியவை இந்திய பல்கலைக் கழகங்களில் ஆய்வுத் தரம் உயரிய நிலையை அடைய வழிமுறைகளை வகுத்துள்ளன. மருத்துவ ஆய்வு பெரியளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவினை மேற்கொண்டு, அதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளன.

இவற்றினை செயல்படுத்தும் விதத்தில் இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக் கழகங்களில் முதல் முறையாக, ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக் கழகம் பிஎச்.டி., ஆய்வுத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.

மருத்துவ படிப்பு படித்தவர்கள் பிஎச். டி., பட்டம் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., போன்ற மேற்படிப்புகள் படிப்பவர்கள், பிஎச்.டி., பட்டம் பெறுவதன் மூலம் மருத்துவ ஆய்வினை பிற்காலத்தில் மேற்கொள்ள வசதியாக, இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் இரண்டு புதிய பிஎச்.டி., திட்டங்கள் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும். ஒருங்கிணைந்த பிஎச்.டி., திட்டம்: இந்த திட்டத்தின்படி எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மருத்துவ பட்ட மேற்படிப்பு படிப்போர், அந்த படிப்புகளுக்கு சேரும் போதே, பிஎச்.டி., படிப்பில் சேரலாம்.

மூன்றாண்டுகளில் பட்ட மேற்படிப்பு முடித்தவுடன், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் தங்கள் பிஎச்.டி., ஆய்வினையும் ஆய்வுத் தரம் குறையாமல் முடித்து பட்டம் பெற இந்த திட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் இருந்து மாறுபடாமல் கொண்டு வரப்பட்டுள்ளது.


இரண்டு ஆய்வு நிலையங்களில் செயல்படும் பிஎச்.டி.,

வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களில் மருத்துவ நிபுணர்கள், அறிவியல் நிபுணர்களுடன் அறிவியல் ஆய்வு நிலையங்களுடன் இணைந்து மருத்துவ ஆய்வு செய்ய வேண்டியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ராமச்சந்திரா பல்கலைக் கழகம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்கலைக் கழகங்கள், மருத்துவ மற்றும் அறிவியல் ஆய்வு நிலையங்களுடன் கல்வி மற்றும் ஆய்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன.

இந்த திட்டத்தின் படி ஆய்வு செய்யும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் மூன்றாண்டு காலத்தில் ஓராண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ள ஆய்வு நிலையங்களில் சென்று ஆய்வு செய்ய வழி அமைத்து தரும்.

இதன் மூலம் ஆய்வுத்தரம் உயரும்; பெரிய ஆய்வுத் திட்டங்கள் உருவாக உறுதுணையாக அமையும். இதற்கான கட்டணங்கள் பல்கலை மானியக் குழு நிர்ணயித்தபடி பெறப்படும்.

இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார். பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாச்சலம், துணை வேந்தர் ரங்கசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: