]]

Wednesday, July 18, 2007

சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயார்

சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயார்!
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு மீன் வளத்துறை சார்பில் ஏற்கனவே நிவாரண உதவிகள் பெற்ற மீனவர்களுக்கு மட்டும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள், மீன்பிடி வலை உட்பட ஐந்து வகையான பொருள்கள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதில் முதல் கட்ட பணியாக சைக்கிள் தயார் செய்யும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் நாகை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பரங் கிப்பேட்டை, சாமியார்பேட்டை, நல்லவாடு, முடசல் ஓடை, கிள்ளை உள்ளிட்ட 45 கடற்கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும் சுனாமியால் கடலூர் மாவட் டத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நிரந்தர குடியிருப்பு வீடுகள் கட்டி தரப்பட்டு நிவாரண பொருள்களாக அரிசி, அடுப்பு, பாய், துணி மற்றும் படகுகள், மீன்பிடி வலை ஆகியவைகள் வழங்கப்பட்டன.

இது தவிர மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் வைத்திருந்த கட்டு மரம், பைபர் படகுகள், மீன்பிடி விசைப்படகுகள் ஆகியவைகள் முழுமையாக வழங்கப்பட்டன. ஒரு பகுதி சேதமடைந்ததால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு நிவாரண தொகைகள் வழங்கப்பட்டன.


மீன் வளத்துறை சார்பில் கட்டுமரம், பைபர் படகுகள், மீன்பிடி விசைப்படகுகள் ஆகியவைகள் சேதமடைந்ததற்கு ஏற்கனவே நிவாரணம் பெற்ற மீனவர்களுக்கு மட்டும் தற்போது மேலும் நிவாரணப் பொருள்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள கடலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலி உட்பட 13 கடலோர மாவட்டங்களுக்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், ஆலப் பாக்கம், பெரியப்பட்டு, சாமியார்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட 45 கடற்கரை கிராமங்களில் மீன் வளத்துறை சார்பில் படகுகள் சேதமடைந்ததற்கு ஏற்கனவே நிவாரண தொகை பெற்ற 7 ஆயிரத்து 942 மீனவர்களுக்கு மட்டும் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள்கள், மீன்பிடி வலைகள், மிதவை சாதனம், ஐஸ் பாக்ஸ், சார்ஜர் விளக்கு ஆகியவைகள் நிவாரண பொருள்களாக வழங்கப்பட உள்ளன.

இதில் முதற்கட்ட பணியாக துறைமுகம், சோனாங்குப்பம், சாமியார் பேட்டை, பெரியபட்டு, கிள்ளை ஆகிய பகுதிகளில் சைக்கிள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன் பிறகு மீன்பிடி வலைகள், மிதவை சாதனம், ஐஸ் பாக்ஸ், சார்ஜர் விளக்கு ஆகியவைகள் கொண்டு வரப்பட்டு மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளன.

0 comments: