]]
Showing posts with label மீனவர்கள். Show all posts
Showing posts with label மீனவர்கள். Show all posts

Monday, August 20, 2007

மீனவர்கள் மறியல் போராட்டம்

கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தக்கோரி கிள்ளை பகுதி மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு

கடல் முகத்துவாரத்தை ஆழப் படுத்தக்கோரி கிள்ளை பகுதி மீனவர்கள் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள முடசல் ஓடை மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை யொட்டி முழுக்குத் துறை, எம்.ஜி.ஆர். திட்டு, சின்ன வாய்க்கால், அன்னை நகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்தும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கடலுக்கு சென்று மீன் பிடித்துதான் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1 மாதமாக ஆற்றுப்பகுதியில் இருந்து கடலுக்கு செல்லும் அன்னங்கோவில் முகத்துவாரம் மணலால் மூடப்பட்டு உள்ளது. அதன் காரணமாக மீனவர்கள் படகுகளை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வரு கின்றனர்.

முடசல் ஓடை கடலோர பகுதியில் சுமார் 500-க்கும் மேற் பட்டலம்பாடி எஞ்சின், பெரிய படகுகள், கட்டுமரம் போன்ற படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாமல் முடசல் ஓடை ஆற்றுப் பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் மீனவ குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


முகத்துவாரத்தை ஆழப்படுத்தக் கோரி அப்பகுதி மீனவர்கள் தமிழக அரசுக்கும், மீன் வளத்துறை அமைச்சருக்கும், மாவட்ட கலெக்டருக்கும், மீன்துறை அதிகாரிக்கும் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த சென்னை வருவாய் துறை ஆணையர் பாரூக்கியிடனும் நேரில் மனு கொடுத்தனர். இருந்தும் எந்த வித பயனும் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட கிள்ளை கடலோர மீனவ பகுதி மக்கள், கடல் முகத்துவாரத்தை ஆழப்படுத்தக்கோரி மறியல் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர்.


மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Wednesday, July 18, 2007

சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயார்

சுனாமியால் பாதித்த மீனவர்களுக்கு வழங்க சைக்கிள்கள் தயார்!
மாவட்டத்தில் ஐந்து இடங்களில் பணிகள் தீவிரம்

கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு மீன் வளத்துறை சார்பில் ஏற்கனவே நிவாரண உதவிகள் பெற்ற மீனவர்களுக்கு மட்டும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள், மீன்பிடி வலை உட்பட ஐந்து வகையான பொருள்கள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதில் முதல் கட்ட பணியாக சைக்கிள் தயார் செய்யும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் தீவிரமாக நடந்து வருகின்றன.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையால் நாகை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பரங் கிப்பேட்டை, சாமியார்பேட்டை, நல்லவாடு, முடசல் ஓடை, கிள்ளை உள்ளிட்ட 45 கடற்கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

மேலும் சுனாமியால் கடலூர் மாவட் டத்தில் மட்டும் 170க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நிரந்தர குடியிருப்பு வீடுகள் கட்டி தரப்பட்டு நிவாரண பொருள்களாக அரிசி, அடுப்பு, பாய், துணி மற்றும் படகுகள், மீன்பிடி வலை ஆகியவைகள் வழங்கப்பட்டன.

இது தவிர மீன்வளத்துறை சார்பில் மீனவர்கள் வைத்திருந்த கட்டு மரம், பைபர் படகுகள், மீன்பிடி விசைப்படகுகள் ஆகியவைகள் முழுமையாக வழங்கப்பட்டன. ஒரு பகுதி சேதமடைந்ததால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு நிவாரண தொகைகள் வழங்கப்பட்டன.


மீன் வளத்துறை சார்பில் கட்டுமரம், பைபர் படகுகள், மீன்பிடி விசைப்படகுகள் ஆகியவைகள் சேதமடைந்ததற்கு ஏற்கனவே நிவாரணம் பெற்ற மீனவர்களுக்கு மட்டும் தற்போது மேலும் நிவாரணப் பொருள்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் உள்ள கடலூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, திருநெல்வேலி உட்பட 13 கடலோர மாவட்டங்களுக்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழங்குடா, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், ஆலப் பாக்கம், பெரியப்பட்டு, சாமியார்பேட்டை, கிள்ளை உள்ளிட்ட 45 கடற்கரை கிராமங்களில் மீன் வளத்துறை சார்பில் படகுகள் சேதமடைந்ததற்கு ஏற்கனவே நிவாரண தொகை பெற்ற 7 ஆயிரத்து 942 மீனவர்களுக்கு மட்டும் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள்கள், மீன்பிடி வலைகள், மிதவை சாதனம், ஐஸ் பாக்ஸ், சார்ஜர் விளக்கு ஆகியவைகள் நிவாரண பொருள்களாக வழங்கப்பட உள்ளன.

இதில் முதற்கட்ட பணியாக துறைமுகம், சோனாங்குப்பம், சாமியார் பேட்டை, பெரியபட்டு, கிள்ளை ஆகிய பகுதிகளில் சைக்கிள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன் பிறகு மீன்பிடி வலைகள், மிதவை சாதனம், ஐஸ் பாக்ஸ், சார்ஜர் விளக்கு ஆகியவைகள் கொண்டு வரப்பட்டு மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளன.