]]

Tuesday, August 21, 2007

உள்ளாட்சி ஊழியர்களுக்கும் அரசு உதவி

சிறப்பு சேம நல நிதி, பணிக்கொடை திட்டத்தில் உள்ளாட்சி ஊழியர்களுக்கும் அரசு உதவி ரூ.10 ஆயிரமாக அதிகரிப்பு
அரசு ஊழியர்களுக்கான சிறப்பு சேமநல நிதி மற்றும் பணிக்கொடை திட்டத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கும் அரசின் பங்கு உதவி ரூ.10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கும், நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் சிறப்பு சேமநலநிதி மற்றும் பணிக்கொடை திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் மாதம்தோறும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெறும்போது அந்த பிடித்தம் மூலம் சேருகிற தொகையும் அதற்கான வட்டியுடன் அரசின் பங்கு உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

இதில் அரசின் பங்கு உதவி கடந்த 15.9.2000 முதல் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஆனால், நகராட்சி, மாநகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு உதவி அதிகரிக்கப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி கொடுக்கப்பட்டதை போன்று உள்ளாட்சி ஊழியர்களுக்கும் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று நகராட்சி, மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், அக்கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று அரசு ஊழியர்களுக்கு வழங்குவதைப் போன்று உள்ளாட்சி மன்ற ஊழியர்களுக்கும் பங்கு உதவியை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த 13-ந்தேதி வெளியிடப்பட்டு இருக்கிறது.

உள்ளாட்சி மன்ற ஊழியர்களுக்கு பங்கு உதவியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்காக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆர். சீத்தராமன் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு சேம நல நிதியில் அரசின் பங்கு உதவியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தியதற்காக நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் நன்றியை காணிக்கையாக்கிக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உத்தரவை அரசு ஊழியர்களைப் போன்று கடந்த 15.9.2000 முதல் அமல்படுத்த வேண்டும் என்றும், நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களை மீண்டும் அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 comments: