மனவளம் குன்றிய, காதுகேளாத குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறப்பு ஆசிரியர்களுக்கான பி.எட். படிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகம்
மனவளம் குன்றிய, காது கேளாத, பார்வையற்ற குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறப்பு ஆசிரியர்களுக்கான பி.எட். படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அஞ்சல்வழியில் அறிமுகப்படுத்துகிறது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். படிப்பை நடத்தி வருகிறது. இதில் தமிழ்வழிக்கு 500 இடங்களும், ஆங்கில வழிக்கு 500 இடங்களும் உள்ளன. 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்று அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் இதில் சேரலாம்.
தகுதி உள்ளவர்கள் நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கப்படுகிறார்கள். நடப்பு கல்வி ஆண்டில் பி.எட். படிப்பில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில், சிறப்பு கல்வி பி.எட். என்ற புதிய ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்பை தொலைதூரக்கல்வி மூலம் வழங்க தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிலேயே இந்த படிப்பு தொடங்கப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.எஸ். பழனிச்சாமி கூறியதாவது:-
மனவளம் குன்றிய, காதுகேளாத, பார்வையற்ற, உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் சிறப்பு ஆசிரியர்களுக்கான பி.எட். பட்டப் படிப்பை தொடங்க முடிவு செய்துள்ளோம். இதற்கு இந்திய மறுவாழ்வு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்வழியில் 250, ஆங்கிலவழியில் 250 ஆக மொத்தம் 500 சீட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த பி.எட். படிப்பு 2 ஆண்டு காலம் கொண்டது. பட்டம் பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் சேரலாம். தற்போது ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் தகுதியானோர் சேர்க்கப்படுவார்கள். இந்த படிப்பை தொடங்குவதற்காக சிறப்பு கல்வியில் பி.எச்டி. பட்டம் முடித்த ஒரு பேராசிரியர் ஒருவரை தேர்வுசெய்துள்ளோம்.
தமிழ்நாட்டில் சுமார் 16 கல்வி நிறுவனங்களில் ரெகுலர் முறையில் இந்த சிறப்பு கல்வி பி.எட். படிப்பு வழங்கப்படுகிறது. இந்த படிப்பு அஞ்சல்வழி மூலம் மத்திய பிரதேசம் போஜ் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தை அடுத்து தென்னிந்திய மாநிலங்களில் இந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில்தான் இந்த சிறப்பு பி.எட். படிப்பை அஞ்சல்வழியில் ஆரம்பிக்கப்படுகிறது.
இவ்வாறு துணைவேந்தர் பழனிச்சாமி கூறினார்.
0 comments:
Post a Comment