]]

Wednesday, August 29, 2007

மத்திய அரசுக்கு ஹஜ் குழு கோரிக்கை

தமிழ்நாட்டில் இருந்து`ஹஜ்' புனித பயணம் செல்ல மேலும் 1,000 பேர்களை அனுமதிக்க வேண்டும்

மத்திய அரசுக்கு ஹஜ் குழு கோரிக்கை

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல மேலும் 1,000 பேர்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஹஜ் குழு கோரிக்கை வைத்துள்ளது.


தமிழக ஹஜ் குழு துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து மெக்காவுக்கு ஹஜ் புனித பயணமாக இந்த ஆண்டு 1 லட்சத்து 57 ஆயிரத்து 400 பேர் செல்கிறார்கள். பிரதமர் ஒதுக்கீட்டில் 10 ஆயிரம் பேர் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எத்தனை பேர் மெக்கா செல்லலாம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதன்படி, தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் செல்ல 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 பெண்கள் உள்பட 26 பேர் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மற்றவர்கள் குலுக்கல் முறையில் மத்திய அரசின் அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதன்படி இந்த ஆண்டு 3 ஆயிரத்து 468 பேர்கள் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஏறத்தாழ 400 பேர் அடங்குவார்கள்.

அரசு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும். இது தவிர தனியார் மூலம் 4 ஆயிரம் பேர் ஹஜ்' புனித பயணம் மேற்கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர மீதம் உள்ளவர்களுக்கும் இந்த புனித பயணம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்டுக்கொண்டு உள்ளார்.

மத்திய மந்திரி அகமது வருகிற 2-ந்தேதி சென்னை வருகிறார். அப்போது புனித பயணம் செல்ல காத்திருப்போரில் மேலும் 1,000 பேர்களுக்காவது அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

ஹஜ் புனித பயணம் நவம்பர் 2-வது வாரம் தொடங்கும். இந்த புனித பயணம் மேற்கொள்பவர்கள் 40 நாளும் அங்கு தங்கியிருந்து, மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருவதற்கு விமான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்குவதற்காக சென்னையில் தங்கும் இடம் ஏற்பாடு செய்யப்படும்.

இந்தியாவிலேயே கேரளாவில் இருந்து தான் அதிகமாக அதாவது 11 ஆயிரம் பேர் அரசு மானியத்தில் செல்கிறார்கள். உத்தரபிரதேசம், மராட்டியம், ஜம்மு-காஷ்மீர், 5-வதாக தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து அதிகமானவர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மத்திய அரசை கேட்டு வருகிறார்.

அரசு மானியத்தின் மூலம் மெக்கா சென்றால் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரத்துக்குள் செலவாகும். அவரவர் தங்குவதற்கான ஓட்டலை தேர்ந்தெடுப்பதை பொருத்து செலவு குறையும். தனியார் மூலம் சென்றால் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவாகும்.

தனியார் நிறுவனம் மூலம் செல்பவர்கள் சிரமத்துக்கு ஆளாவதால், ஹஜ் கமிட்டியின் கீழ் தனியாரையும் கொண்டு வரலாம் என்று அரசு திட்டமிட்டு உள்ளது.

இவ்வாறு துணைத்தலைவர் அபூபக்கர் கூறினார்.

0 comments: