]]

Monday, September 17, 2007

மாணவர்களிடம் சாதியை சொல்லும்படி கட்டாயப்படுத்த கூடாது

மாணவர்களிடம் சாதியை சொல்லும்படி கட்டாயப்படுத்த கூடாது

பள்ளிக்கூடங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மாணவர்களிடம் சாதியை சொல்லும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கூடங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சேலத்தை சேர்ந்த 81 வயதான சுதந்திர போராட்ட தியாகி வேலு காந்தி என்ற வேலு, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் தொடக்க வகுப்புகளுக்கான சேர்க்கையின் போது, மாணவர்களிடம் சாதி என்ன? என்று கேட்கப்படுகிறது. இது குழந்தைகளிடம் சாதி உணர்வுகளையும், பாகுபாட்டையும் துண்டி விடும். பள்ளி அளவில் குழந்தைகளின் கல்வி தேர்வு முடிவுகளில், சாதி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அரசியல் சட்டத்தின்படி சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் இந்த சாதி நடைமுறைகளை நீடிக்க விடுவதன் மூலம் அரசு தனது கடமையில் இருந்து தவறிக்கொண்டு இருக்கிறது.

எனவே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது விநியோகிக்கப்படும் விண்ணப்ப படிவங்களில் சாதி பற்றி கேட்பதை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுதந்திர போராட்ட தியாகி வேலு காந்தி நேரில் ஆஜராகி வாதாடினார். அப்போது தனது கருத்துகளை தமிழில் எடுத்து கூறினார்.

இதையடுத்து மனுதாரரின் கருத்தை நீதிபதிகள் பாராட்டினர். எனினும் சாதி பற்றி கேட்க தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர்.

நீதிபதிகள் கூறுகையில்; மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களிடம் சாதியை கூறும்படி, பள்ளிக்கூடங்கள் கட்டாயப்படுத்த முடியாது. இதுபற்றி வேறு வார்த்தைகள் மூலம் குறிப்பிடலாம். அல்லது மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும்.

இந்த பிரச்சினையில் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால், அது ஸ்காலர்ஷிப் மற்றும் பிற சலுகைகளை பெற விரும்பும் மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர்.

பின்னர் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

0 comments: