பரங்கிப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து
57 சுனாமி குடியிருப்பு வீடுகள் எரிந்து சாம்பல்
ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
பொதுமக்கள் வீதியில் நின்று தவித்தனர்
பரங்கிப்பேட்டை அருகே நடந்த பயங்கர தீவிபத்தில் 57 சுனாமி குடியிருப்பு வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. வீடுகள் இல்லாததால் பொது மக்கள் வீதியில் நின்று தவித்தனர்.
சுனாமி குடியிருப்பு வீடுகள்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் பாரதி நகரில் 57 சுனாமி குடியிருப்பு வீடுகள் இருந்தது. அந்த குடியிருப்பு வீடு ஒன்றில் சுந்தரம் என்பவர் வசித்து வந்தார். அந்த வீடு கீற்றுக் கொட்டகையால் அமைக்கப் பட்டிருந்தது.
நேற்று மாலை சுந்தரத்தின் மனைவி சமையல் செய்து விட்டு அடுப்பில் உள்ள தீயை அணைக்காமல் சென்று விட்டார். சற்று நேரத்தில் அந்த அடுப்பில் உள்ள தீ எதிர்பாராதவிதமாக வீட்டின் கீற்றுக்கொட்டகையில் பிடித்தது. சற்று நேரத்தில் தீ மள மளவென பிடித்து எரிய ஆரம்பித்தது. வீட்டில் இருந்த சுந்தரம், அவருடைய மனைவி ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
57 வீடுகள்
அதற்குள் பக்கத்து வீடுகளான சின்னையன், ராஜேந்திரன், வீரமணி, நாகப்பன், மாரியப்பன், சீனு, தாஸ், கண்ணுசாமி, முருகன், தங்கவேல், அன்புமணி, சாமிநாதன் உள்பட 57 பேர் வீட்டுக்கும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் 57 வீடுகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேறி தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இது பற்றி அப்பகுதி மக்கள் பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கடலூர் மண்டல தீயணைப்பு அதிகாரி கண்ணன், சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முகமது சாதிக் அலி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைந்தனர்.
ரூ. 20 லட்சம் சேதம்
அதற்குள் 57 வீடுகளும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் 57 வீடுகளில் இருந்த கட்டில், பீரோ, துணிமணிகள், அரிசி, ரொக்கப்பணம் மற்றும் அனைத்து பொருட்களும் தீயில் கருதி சேதமானது.இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
இந்த தீ விபத்தினால் வீட்டில் இருந்து எந்த பொருட்களையும் எடுக்க முடியவில்லை. இதனால் 57 வீடுகளில் உள்ளவர்களும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் தங்க வீடு இல்லாமல் தெருவில் நின்று தவித்தனர்.
தாசில்தார் பார்வையிட்டார்
இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தாசில்தார் பட்டு சாமி, துணை தாசில்தார் சந்திரசேகரன், ஆணையாளர் நடராஜன், பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ், சின்னூர் ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாலட்சுமி ஜீவராஜ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
பின்னர் தீவிபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர். அதனை தொடர்ந்து அனைவரும் அங்குள்ள விடியல் நகர், விடுதலை நகரில் உள்ள சமுதாய கூடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்து சம்பவத்தால் பரங்கிப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0 comments:
Post a Comment