]]

Wednesday, September 5, 2007

"சம தேநீர்'' விருந்து நிகழ்ச்சி

இரட்டை டம்ளர் முறை இருந்தால் புகார் கூறலாம்

இரட்டை டம்ளர் முறை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இனி மாவட்டம் முழுவதும் "சம தேநீர்' விருந்து நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என இன்ஸ்பெக்டர் கங்கப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக நீதி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கங்கப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:

கடலூர் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் உள்ள டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொண்டதில் கடந்த ஜூலை மாதம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் சரகம் ஸ்ரீபுத்தூர், கள்ளிப்பாடி, கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகம் வள்ளியம் போன்ற பகுதிகளில் டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை இருப்பதை கண்டுபிடித்து மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இரட்டை டம்ளர் முறைகளை ஒழிக்கும் பொருட்டு அடிக்கடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல் துறை ஐ.ஜி., பிரதீப் வி பிலிப், டி.ஐ.ஜி., ரவி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமை சரக துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் மேற்பார்வையில் இரட்டை டம்ளர் முறை இல்லை என நிரூபிக்கும் வகையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து டீ சாப்பிடும் "சம தேநீர்' விருந்து நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டோம்.

அதன்படி விருத்தாசலம் பகுதியில் கருவேப்பிலங்குறிச்சி போன்ற இடங் களில் போலீஸ் நண்பர்கள், சமூக நல ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரமுகர்கள், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை துறையும், அந்த பகுதி ஆதிதிராவிடர்கள் மற்றும் இதர ஜாதியினரையும் ஒருங்கிணைத்து டீ கடையில் ஒன்றாக அமர்ந்து ஒரே விதமான டம்ளரில் டீ சாப்பிடும் "சம தேநீர்' விருந்து நிகழ்ச்சியை நடத்தினோம்.

இது அந்த பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற "சம தேநீர்' விருந்து நிகழ்ச்சியை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை இருந்தால் பொது மக்கள் கடலூர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பாதுகாப்பு பிரிவு அலுவலக தொலைபேசி எண் 296927 மற்றும் 94438 20665 என்ற மொபைல் போனிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு இன்ஸ்பெக்டர் கங்கப்பன் கூறினார்.

0 comments: