]]

Saturday, September 29, 2007

டில்லி மதரசாக்களில் சமஸ்கிருத வகுப்புகள்

மதரசாக்களில் சமஸ்கிருத வகுப்புகள்

இந்துக்களுடன் பழக புதிய முயற்சி

டில்லியில் உள்ள மதரசா உட்பட பல்வேறு மதரசாக்களில் சமஸ்கிருத வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இந்து சகோதரர்களுடன் இணைந்து பழக இது உதவிகரமாக இருக்கும் என மதரசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதரசா என்பது முஸ்லிம் மதப்பள்ளி. இங்கு குரான் உட்பட இஸ்லாமிய மதம் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உ.பி.,யில் உள்ள தரூல் தியோபாண்ட் மதரசாவில் பட்டப்படிப்பு முடித்தவர் ஷாஹின் குவாஸ்மி.

ஆமதாபாத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜி.கே. பந்த் என்பவரிடம் குவாஸ்மி இரண்டு ஆண்டுகள் சமஸ்கிருதம் படித்து தேர்ந்தார்.

2002ம் ஆண்டில் உலக அமைதி அமைப்பு என்ற என்.ஜி.ஓ., அமைப்பை தோற்றுவித்தார்.

இதன் பின்னர் மதரசாக்களில் சமஸ்கிருதம் திட்டத்தை குவாஸ்மி தொடங்கி வைத்தார்.

முதலில் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல, சமஸ்கிருத மொழி வல்லுனர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், குவாஸ்மிக்கு சமஸ்கிருத மொழி மீதுள்ள ஆர்வத்தை புரிந்து கொண்டு அவருக்கு உதவ முன் வந்துள்ளனர்.

டில்லியில் ஜாமிய நகர் பகுதியில் 1.80 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

இங்குள்ள தாஜ்வீத் உல் குரான் மதரசாவில் தற்போது இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ படிப்பாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது.

50 மாணவர்கள் முதல் நிலையாக சமஸ்கிருத மொழியில் இருக்கும் ராமாயணம், மகாபாரதம், வேதங்கள், புராணங்கள், பகவத் கீதை, மகாகவி காளிதாசின் படைப்புகள் ஆகியவற்றில் உள்ள சுலோகங்களை இவர்கள் கற்று வருகின்றனர்.

டில்லியில் ஷாதரா என்ற இடத்தில் ஷாஹாஸ் ஹிர் உலும் மதரசா, ஜாமியா மிலியா இஸ்லாமியா அருகில் உள்ள இஸ்லாமிய அகடமி, மீரட் நகரில் உள்ள சில மதரசாக்கள், காசியாபாத் மற்றும் பீகாரில் உள்ள சில மதரசாக்களிலும் சமஸ்கிருதம் கற்று தரப்படுகிறது.

இவை அனைத்தும் குவாஸ்மியின் என்.ஜி.ஓ., அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

டில்லி ஜனக்புரியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத சான்தான் என்ற நிகர்நிலை பல்கலைக் கழகம் மதரசாக்களுக்கு சமஸ்கிருத ஆசிரியர்கள் மற்றும் பாட புத்தகங்களை அனுப்பி வருகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத ஒருங்கிணைப்பாளராக உள்ள ரத்தன் மோகன் ஜா கூறுகையில்,

"இந்தியா முழுவதும் ஆயிரம் மையங்களில் சமஸ்கிருதம் கற்று தருகிறோம்.

ஆனால், முதல் முறையாக சமஸ்கிருதம் கற்று தரும்படி மதரசாக்கள் எங்களை அணுகியுள்ளன.

ஜாமியா நகரில் உள்ள மதரசாவில் 2006ம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் சமஸ்கிருதம் கற்று தரப்படுகிறது.

தற்போதைய மாணவர்கள் முதல் நிலையை முடித்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் இரண்டாம் நிலையை முடிப்பர்.

அவர்களுக்கு எங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும்' என்றார்.

மதரசாக்களில் சமஸ்கிருதம் கற்று தரும் திட்டத்தை ஏற்படுத்திய குவாஸ்மி கூறுகையில்,

"இரு நம்பிக்கைகளுக்கு இடையே உள்ள அறியாமையை போக்கவே இந்த திட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

அறியாமையால் மேன்மையானவன் என்ற போக்கு உருவாகிறது.

இதுவே பல்வேறு மோதல்களுக்கு வழிவகுக்கிறது.

சமஸ்கிருத பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் முதலில் எங்கள் திட்டத்தை புரிந்து கொள்ளவில்லை.

நன்கு விளக்கி கூறிய பின், மிக ஆர்வத்துடன் உதவ முன் வந்தனர்.

இந்து சகோதரர்களுடன் நன்கு பழகவே இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்'' என்றார்.

ஜாமியா நகர் மதரசாவில் நாசிம் (முதல்வர்) என்ற பொறுப்பில் இருப்பவர் அப்துல் ஹாசி.

அவர் கூறுகையில்,

"இந்து சகோதரர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை புரிந்து கொள்ளவே மதரசாவில் சமஸ்கிருதத்தை கற்று தருகிறோம்.

இந்துக்களுடன் நெருங்கி பழக சமஸ்கிருதம் உதவுகிறது.

கடந்த ஆண்டு இந்த திட்டத்தை நாங்கள் அறிவித்த போது சில மவுல்விகளும், மவுலானாக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சமஸ்கிருதம் இஸ்லாமிய கலாச்சாரத்தை சேர்ந்தது இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

சமஸ்கிருதம் படிப்பதால் வருவாய் கிடைக்கபோவதில்லை என்றும் சுட்டிக் காட்டினர்.

எனினும், காலப்போக்கில் எங்கள் எண்ணத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்'' என்றார்.

மதரசாவில் சமஸ்கிருதம் படிக்கும் அமீர் உல் ஹக் என்ற 18 வயது மாணவன் கூறுகையில்,

"முதலில் சமஸ்கிருதத்தை பார்க்கும் போது இந்தி மொழி போல தான் உள்ளது என்று கருதினேன்.

தற்போது ஓரளவு புரிந்து கொண்ட பிறகு சமஸ்கிருத மொழியின் வலிமையை நன்கு உணர முடிந்தது'' என்றார்.

உலக அமைதி அமைப்பு என்ற என்.ஜி.ஓ.,வை நடத்தி வரும் குவாஸ்மி அடுத்த திட்டத்துக்கும் தயாராகி விட்டார்.

முஸ்லிம் அல்லாதவர்கள் குரான் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்தை புரிந்து கொள்ளும் வகையில் ஒரு பாட திட்டத்தை இஸ்லாமிய நிபுணர்களுடன் இணைந்து அவர் உருவாக்கி வருகிறார்.

0 comments: