]]

Sunday, September 16, 2007

வளைகுடா வேலை - மத்திய அரசு புது திட்டம்

வளைகுடா வேலை; மத்திய அரசு புது திட்டம் 'பிலிப்பைன்ஸ் மாடல்' நடவடிக்கை எடுக்க முடிவு

வளைகுடா வேலைக்கு பல்லாயிரம் ரூபாய் தந்து, ஆவணங்கள் எதுவும் இல்லாமல் போவதை தடுக்கவும், அங்கு இந்திய தொழிலாளர்கள் 'அடிமைத்தனமாக' நடத்தப்படுவதை முடிவுக்கு கொண்டு வரவும், மத்திய அரசு புது நடைமுறைகளை கொண்டு வர உள்ளது.

வளைகுடா நாடுகளில், வீட்டு வேலை, கட்டட வேலை என்று சாதாரண கூலி வேலைகளுக்கு பல லட்சம் பேர் செல்கின்றனர்.

இந்தியாவில் இருந்து, ஏஜென்ட்களிடம் பல்லாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து, ஆயிரக்கணக்கான பேர், இப்படிப்பட்ட அன்றாட கூலி வேலை செய்ய, இன்றும் கூட, வளைகுடா சென்று கொண்டிருக்கின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது, இவர்கள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐக்கிய அரபு குடியரசு சமீபத்தில் எடுத்த அதிரடி நடவடிக்கையால், பல ஆயிரம் பேர், இந்தியா திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வளைகுடாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து வந்துவிட்டனர்.

வளைகுடா நாடுகளில், சட்டவிரோதமாக வேலைக்கு செல்வதை தடுப்பதுடன், சாதாரண வேலைக்கு செல்வோருக்கும், குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிப்பது தொடர்பாக, மத்திய அரசு முதன் முதலாக முழுவீச்சில் இறங்கியுள்ளது.

வெளிநாட்டு இந்தியர் நல அமைச்சர் வயலார் ரவி, இதுதொடர்பாக புது நடைமுறைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு குடியரசு, கத்தார், பக்ரைன், யேமன், குவைத் மற்றும் சிரியா, லெபனான் போன்ற நாடுகளில், இந்தியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக, இந்த நாடுகளில் உள்ள இந்திய ததூதர்களை அழைத்து பேச திட்டமிட்டுள்ளார் வயலார் ரவி.

அவர் கூறுகையில், 'வளைகுடா நாடுகளில், சாதாரண வேலைக்கு செல்லும் இந்தியர்கள் நிலை பற்றிதான் நான் வேதனைப்படுகிறேன். அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி கூட கிடைப்பதில்லை.

குறிப்பாக, பெண்களுக்கு மிகவும் குறைவாக சம்பளம் அளிப்பதுடன், துன்புறுத்தலுக்கும் ஆளாக நேரிடுவது பற்றியும் அரசு கவனத்தில் கொண்டுள்ளது' என்றார்.

பிலிப்பைன்ஸ், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு போகும் தன் நாட்டவருக்கு, குறைந்தபட்ச சம்பளமாக ரூ.16 ஆயிரம் தர வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது.

அப்படி, இந்தியாவும், வளைகுடா நாடுகளை வலியுறுத்தி, ஒரு கட்டுப்பாடான நடைமுறையை கொண்டு வர வேண்டும் என்று, வயலார் ரவி விரும்புகிறார்.

பிலிப்பைன்ஸ் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி, யாரும் ஏஜென்ட்களை நம்பி வளைகுடா நாடுகளுக்கு செல்வதில்லை.

ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. வளைகுடாவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு, கூலி வேலைகளுக்கு ஆள் வேண்டும் என்றால், சட்டவிரோதமாக, ஏஜன்ட்கள் மூலம் வேலைக்கு அனுப்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

வளைகுடாவில் உள்ள தொழில் நிறுவனங்கள், இந்திய தொழிலாளிகள் இடையே உள்ள பிரச்னைகளை ஆராய்ந்து, இரு தரப்பிலும் உள்ள குறைகளை நீக்கி, கட்டுப்பாடுகளை விதித்து, புதிய நடைமுறைகளை அறிவிக்க உள்ளது மத்திய அரசு.

அதன்படிதான், வளைகுடாவில், தோட்ட வேலை, வீட்டு வேலை, தச்சு வேலை என்று சாதாரண வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவர்.

சட்டப்படி அனுப்பப்படும் இந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

சுற்றுலா பயணிக்கான 'விசா'வை வாங்கி, சட்டவிரோதமாக பலரை வேலைக்கு அனுப்பும் ஏஜன்ட்களை கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

0 comments: