]]

Sunday, September 16, 2007

பல் டாக்டர்களுக்கு காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்

பல் டாக்டர்களுக்கு காத்திருக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகள்

பல் டாக்டர் படிப்பு முடித்து விட்டு, அத்துறையில் தான் வேலை வேண்டும் என்று அடம் பிடிக்காதோருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 43 பல் மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் மொத்த பல் டாக்டர்கள் பணியிடங்களின் எண்ணிக்கை 229 மட்டுமே.

பல் டாக்டர் இளநிலை பட்டப்படிப்பு முடித்தோர், பெரும்பாலும் முதுநிலை படிப்புக்கு செல்வதில்லை. முதுநிலை படிப்பு கல்விக் கட்டணம் மிகவும் அதிகம் என்பது தான் இதற்கு காரணம்.

அரசு கல்லூரிகளில் ரூ. 20 ஆயிரமும் தனியார் கல்லூரிகளில் ரூ. 1.54 லட்சமும், சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் ரூ. 1.56 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுகலை படிப்பு முடித்தாலும், வேலைக்கு உத்தரவாதம் இல்லை. இளநிலை பட்டப் படிப்பு முடித்த பல் டாக்டர்களுக்கு தாங்கள் படித்த துறையில்தான் தொழில் செய்ய வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு வேறு வகையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இளநிலை பல்மருத்துவ பட்டப் படிப்பு முடித்தோர், அரசு வேலை கிடைக்காமல் போனால், தனியாக கிளினிக் வைக்கலாம். ஆனால், கிளினிக் உபகரணங்களுக்கு மட்டும் ரூ. ஆறு லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

இதைத் தவிர மாத வாடகை, உதவியாளர் சம்பளம் எல்லாம் தனி.

எனவே, பல் மருத்துவ கிளினிக் அமைப்பது மிகவும் செலவு ஏற்படக்கூடியது.

பல் மருத்துவத்தில் தான் ஈடுபடுவேன் என்று அடம் பிடிக்காத பல் டாக்டர்கள், பெங்களூரில் இப்போது மருத்துவ நடைமாற்று வல்லுநர்கள், இன்சூரன்ஸ் ஏஜன்டுகள், டேட்டா என்ட்ரி, பிசினஸ் பிராசசிங் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் மற்றும் கால் சென்டர்களில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்க்கின்றனர்.

பல் மருத்துவத் தொழிலில் ஈடுபட ஓராண்டாக காத்திருந்த டாக்டர் ஜோதி, அந்த எண்ணத்தை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு இப்போது அவுட்சோர்சிங் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

முதுநிலை படிப்புக்கோ, அல்லது தனியாக கிளினிக் அமைப்பதற்கோ தேவையான பணம் இல்லாததால், அவரது முடிவு மாறியது. அவுட்சோர்சிங் துறை, தனது படிப்புக்கு சம்பந்தமே இல்லா விட்டாலும், இது மிகவும் சவாலான, அதே நேரத்தில் சுவாரஸ்யமான வேலையாக இருக்கிறது என்கிறார் ஜோதி.

இந்த வேலையில் சுளையாக கிடைக்கும் சம்பளத்தை சேமித்து வரும் ஜோதி, அதை சேமித்து ஒரு பல் மருத்துவமனை கிளினிக் அமைக்க திட்டமிட்டுள்ளார்.

0 comments: