]]

Thursday, September 20, 2007

மன வளர்ச்சி குன்றியோருக்கு நிதியுதவி

மன வளர்ச்சி குன்றியோருக்கு தமிழக அரசு நிதியுதவி

மன வளர்ச்சி குன்றிய 20 ஆயிரம் பேருக்கு, மாதந்தோறும் நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தங்களை பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் உள்ள 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மன வளர்ச்சி குன்றியோருக்கு, கடும் ஊனமுற்றோருக்கான உதவித் தொகை வழங்கப்படுவது போல நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மன வளர்ச்சி குன்றியவர்களுக்கான நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதி, இதற்கான உறுதிமொழியை அளித்திருந்தார்.

இதையடுத்து, மன வளர்ச்சி குன்றியோருக்காக ரூ. 25 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவர்களது எண்ணிக்கை மற்றும் வருமான வரம்பை கருத்தில் கொள்ளாமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ள 20 ஆயிரம் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் மாத பராமரிப்புத் தொகையாக 500 ரூபாய் வழங்க, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, இந்த நிதியாண்டில் ஏழு கோடியே 35 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மன வளர்ச்சி குன்றிய 20 ஆயிரம் பேருக்கு, இம்மாதம் (செப்டம்பர்) 1ம் தேதியில் இருந்து மணியார்டர் மூலம் மாதா மாதம் உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த உத்தரவை, மன வளர்ச்சி குன்றியோருக்கான நிறுவனங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

மேலும், வரும் நிதியாண்டுகளில் 60 சதவீத மன வளர்ச்சி குன்றியவர்கள் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு, அனைத்து மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று இந்த கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

0 comments: