]]

Friday, September 7, 2007

இன்று சர்வ தேச எழுத்தறிவு தினம்

இன்று சர்வ தேச எழுத்தறிவு தினம்

எழுத்தறிவு என்றால் என்ன...?

ஏதாவது ஒரு மொழியில் புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர் என கருதப்படுகிறார்.

இது தவிர எழுத்தறிவு பெற்றவராக கருத குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த தகுதியும் நிர்ணயிக்கப்படவில்லை.

இதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 65 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்கள் என தெரியவந்துள்ளது.

இதனால் உலகிலேயே அதிகளவு எழுத்தறிவற்றோர் வசிக்கும் நாடு என்ற நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பது கடினமான காரியமாக இருக்கிறது. பெண்களில் 55 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

அரசியல் குழப்பங்களும், வறுமையும் வாட்டியெடுக்கும் வங்கதேசத்தில் பெண்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் சமூக அளவில் மாற்றம் தேவை என இது உணர்த்துகிறது.

6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைவரும் கல்வியறிவு பெறுவது கட்டாயம் என்ற சட்டமிருந்தும், கல்விக்கென 2 சதவீதம் சிறப்பு வரி விதிக்கப்பட்டும், சில மாநிலங்களில் மத்திய அரசின் கல்வி வளர்ச்சி திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை.

பீகாரில் 47 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் வறுமையால் எழுத்தறிவின்மை; எழுத்தறிவு இல்லாததால் வறுமை என்ற நிலை.

எழுத்தறிவு பெற்றோர் அதிகமுள்ள கேரளாவில் வசிப்போரின் சராசரி வாழ்நாள் 73 ஆண்டுகளாக உள்ளது.

பீகாரில் இது 65 ஆண்டுகளாக உள்ளது. எழுத்தறிவுக்கும், ஆரோக்கியத்துக்கும் நேரடி தொடர்பு இருப்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

இதனால் தான் 'ஆரோக்கியமும், நல்வாழ்வும் தரும் கல்வி' என்பதை இந்த ஆண்டு எழுத்தறிவு தினத்தின் கோஷமாக ஐ.நா., முன்வைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள மனிதவளத்தை சிறப்பான வழியில் பயன்படுத்த அனைவரும் கல்வி பெற வேண்டியது அவசியம்.

கல்வியறிவு பெறுவது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று என்கிறது ஐ.நா.,

2015க்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை யுனெஸ்கோ நிர்ணயித்துள்ளது. இதற்கு முழுமையான ஒத்துழைப்பு தருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் பள்ளிக்கு அனுப்ப தீவிர முயற்சி எடுக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

1994ம் ஆண்டு மத்திய அரசின் மாவட்ட தொடக்க கல்வி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரம் பள்ளிகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டம் பெருமளவில் மாணவர்களை பள்ளிகளுக்கு ஈர்த்தது.

இதை பின்பற்றி மத்திய அரசும் 1995ம் ஆண்டு முதல் இலவச மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

2010க்குள் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கை வைத்துக்கொண்டு "சர்வ சிக்ஷா அபியான்' திட்டம் உருவாக்கப்பட்டது.

நகர்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் தொடக்க கல்விக்கு தனியார் பள்ளிகளையே நாடும் சூழல் உள்ளது.

இதனால் அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

0 comments: