]]

Friday, September 7, 2007

கூட்டுறவு வங்கிகளில் சலுகை பெற கால அவகாசம் நீடிப்பு

கூட்டுறவு வங்கிகளில் பண்ணை சாரா கடன்களுக்கு சலுகை பெற கால அவகாசம் நீடிப்பு

மண்டல இணைப்பதிவாளர் மிருணாளினி தகவல்

கூட்டுறவு வங்கிகளில் பண்ணை சாரா கடன்களுக்கு சலுகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மண்டல இணைப்பதிவாளர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கடலூர் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றில் பண்ணை சாராக் கடன் பெற்றவர்களின் சுமையை குறைக்கும் வகையில் வட்டி குறைப்பு திட்டம் 2006-ன் கீழ் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி 27.12.2006-ல் தவணை தவறிய அனைத்து பண்ணை சாராக் கடன்களுக்கும் 31.3.2001 தேதியிலிருந்து வட்டி விகிதம் 18 சதவிதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்தும், அபராத வட்டி 3 சதவீதம் தள்ளுபடி செய்தும் உள்ளது.

இந்த சலுகைகளை அடைய பயன்தாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய கடன் தொகையில் குறைந்த பட்சம் 25 சதவீத தொகையை 30.06.2007-க்குள் செலுத்தி வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும், எஞ்சிய 75 சதவீத தவணை தவறிய கடன் பாக்கித் தொகையை 31.12.2007-க்குகள் முழுமையாக செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்துக்கு கடன்தாரர்களிடம் மிகுந்த வரவேற்பு உளளதால் அவர்களின் நலன் கருதி இத்திட்டத்துக்கு அளித்துள்ள கால அவகாசத்தை நீட்டித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடன்தாரர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய 25 சதவீத தொகையை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி வங்கியுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு எஞ்சிய 75 சதவீத தொகையை வருகிற டிசம்பர் 31-ந்தேதிக்குள் செலுத்தி கடன் நேர் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தகுதியுள்ள அனைத்து கடன்தாரர்களும் தவறாமல் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் இணைப்பதிவாளர் மிருணாளினி கூறியுள்ளார்.

0 comments: