கடலூரில் புதிய மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்
மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை
கடலூரில் புதிய மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க தலைவர் நிஜாமுதீன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் குடிகாடு, தியாகவல்லி பஞ்சாயத்தில் அமைய உள்ள கடலூர் பவர் கம்பெனியால் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் மற்றும் கடல் வளமும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்த கம்பெனி ரூ.6 ஆயிரத்து 4 கோடி முதலீட்டில் 1,270 ஏக்கரில் அமைய உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் சல்பர்-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு, காற்றில் மிதக்கும் திடப்பொருள் வேதிப்பொருள் அமில மழை, ஏரிகள், குளங்கள், நீராதாரம், கடல்வளம் ஆகியவற்றை பாதிக்கும்.
கடலூர் சிப்காட் வளாகத்தில் ஏற்கனவே 26 அபாயகரமான ரசாயன கழிவுகள் அரசு நிர்ணயித்த அளவைவிட 20 ஆயிரம் மடங்குக்கு மேல் உள்ளது. அடுத்தடுத்து இப்பகுதியில் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலை அமைந்தால் மிகப்பெரிய உடல்நல சீர் கேட்டுக்கு அது வழிவகுக்கும்.
இந்த தொழிற்சாலையினால் இப்பகுதியில் நேரடி வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. படித்து தொழில் தெரிந்தவர்களுக்கு இந்த வேலை பயன்படாது. ஒரு கோடி முதலீட்டுக்கு ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்காத இந்த தொழிற்சாலை தேவையில்லை.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment