]]

Monday, September 3, 2007

சச்சார் கமிட்டி பரிந்துரைகளை சட்டமாக்க வேண்டும்

இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே சச்சார் கமிட்டி பரிந்துரைகளை சட்டமாக்க வேண்டும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா பேட்டி


சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சச்சார் கமிட்டி பரிந்துரைகளை இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா கூறினார்.

தேசிய செயற்குழு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் அகில இந்திய தலைவர் ஜி.எம். பனாத்வாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து 90 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்மானங்களாக நிறைவேற்றியிருக்கிறோம்.

அணுசக்தி ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு மத்தியில் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இப்போது மத்திய அரசு சில விளக்கங்களை தந்தாலும் இவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இந்தியா மிக நெருக்கமாக உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும். வெளியுறவு கொள்கைகள் சுதந்திரமானதாகவும், நிர்ப்பந்தத்திற்கு கட்டுப்படாதவாறும் இருக்க வேண்டும். தேச நலன், தேச பாதுகாப்பு போன்றவற்றில் இந்தியா எந்தவகையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது.

இந்த கூட்டத் தொடரிலேயே...

சச்சார் கமிட்டி பரிந்துரை, மிஸ்ரா கமிஷன் அறிக்கை போன்றவை தாக்கல் செய்யப்பட்டு இவ்வளவு காலம் ஆகியும் இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு இப்போது ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த பரிந்துரைகளை இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும்.

வங்காள தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு எங்களது எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு விசா நீடிப்பு செய்தது கண்டிக்கத்தக்கது. அவரது விசாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

ஐதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டிப்பதுடன், இதற்காக எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத அப்பாவி முஸ்லிம்களிடம் விசாரணை நடத்துவதையும், மதரஸாக்களில் நள்ளிரவு நேரங்களில் சோதனை நடத்துவதையும் கண்டிக்கிறோம்.

கேரள அரசுக்கு கண்டனம்

மத்திய அரசு முஸ்லிம் சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்காக தனி திட்டம் வகுத்து, அதற்காக நிதி ஒதுக்க வேண்டும். கேரள மாநில கம்யூனிஸ்டு அரசு அந்த மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகவும், அடிப்படை உரிமைகளை மறுக்கும் பல செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்டிக்கிறோம்.

கேரள அரசு கொண்டுவர முடிவு செய்துள்ள கல்வி சட்ட திருத்த மசோதா சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை பெரிதும் பாதிக்கும். அதனை கைவிட வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் போக்கை கேரள அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.

தமிழக அரசு சிறுபான்மையினரின் நலன்களுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதே போல தேர்தல் அறிக்கையில் கூறியவாறு சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டையும் விரைவில் அமல்படுத்த வேண்டும்.

தோல் தொழிலில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய துணைத் தலைவராக...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநில தலைவராக உள்ள கே.எம். காதர்மொய்தீன் அகில இந்திய துணைத் தலைவராக இந்த செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பனாத்வாலா கூறினார்.

பேட்டியின் போது காதர்மொய்தீன் எம்.பி., பொது செயலாளர் டாக்டர் ஹக்கிம் சையத் சத்தார், மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments: