2001 தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல்
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விசாரணை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
பரங்கிப்பேட்டை கோர்ட்டு உத்தரவு
2001-ம் ஆண்டு தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில், ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்து பரங்கிப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
4 தொகுதிகளில் போட்டி
தமிழ்நாட்டில் கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
4 தொகுதிகளிலும் அவருடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஜெயலலிதா 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்ததை எதிர்த்து, தி.மு.க. எம்.பி. குப்புசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறியதாக குறிப்பிட்டிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் மனு
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜுன் மாதம் 13-ந் தேதி உத்தரவிட்டது.
அதன்படி கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் மனு தாக்கல் செய்ததற்காக பரங்கிப்பேட்டை கோர்ட்டிலும், மற்றும் புதுக்கோட்டை கோர்ட்டிலும் ஜெயலலிதாவுக்கு எதிராக அந்தந்த தேர்தல் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில் ஜெயலலிதா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உள்நோக்கத்தோடு இந்த விவகாரம் தற்போது எழுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் கமிஷன் தொடர்ந்துள்ள இரு வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்தது.
தேதி ஒத்திவைப்பு
இந்நிலையில் பரங்கிப்பேட்டை கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் அதிகாரி செல்வமணி தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நேற்று பரங்கிப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர், ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளதால் இவ் வழக்கை வருகிற 26-10-2007-ந் தேதிக்கு மாற்றி உத்தர விட்டார்.
வழக்கில் தேர்தல் கமிஷன் சார்பில் தேர்தல் அதிகாரி செல்வமணி ஆஜரானார்.
0 comments:
Post a Comment