]]

Saturday, July 7, 2007

சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும்

சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும்
கருணாநிதி அறிவிப்பு


சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.


தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை வருமாறு:-


சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு


கேள்வி:- ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நான்கு சதவிகித இட ஒதுக்கீடு செய்வதற்கான அவசரச் சட்டம் வரப் போவதாகச் செய்திகள் வந்துள்ளதே?


பதில்:- தமிழ்நாட்டிலே கூட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆட்சி தான் பொறுப்பிலே உள்ளது.

இந்தப் பிரச்சினை குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், "இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களுக்கு தனி இடஒதுக்கீடு கோருவது நியாயமானதே. இது தொடர்பாக அவசரப்பட்டு சட்டம் கொண்டு வந்து நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுவிடக் கூடாதே என்பதற்காக இதுகுறித்து தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இது தொடர்பாக சட்ட நிபுணர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதற்காகத்தான் இந்தப் பிரச்சினையில் அரசு அவசரம் காட்டாமல் காலதாமதம் செய்து வருகிறது.

இதனால் இந்தக் கோரிக்கையை அரசு கைவிட்டதாக அர்த்தமில்லை. இந்தப் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயன்று வருகின்றனர். இஸ்லாமிய சமுதாயத்தினர் அவசரப்பட்டு அரசியலாக்கும் முயற்சிகளுக்கு பலியாகிவிடக் கூடாது'' என்று அளித்துள்ள விளக்கத்தையே எனது பதிலாக அளித்திடுகிறேன்.


அண்மையில் கூட அந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதை அனைவரும் அறிவார்கள். எனவே சிறுபான்மையோருக்கான தனி இடஒதுக்கீடு வந்தே தீரும்.

0 comments: