]]

Tuesday, July 17, 2007

லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்னை பல்கலை புது ஒப்பந்தம்

லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்னை பல்கலை புது ஒப்பந்தம்

சென்னை : தமிழக மாணவர்கள் லண்டனில் சென்று படிக்கும் வசதியை சென்னைப் பல்கலைக் கழகம் செய்து தருகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(எம்.ஓ.யு.,) சென்னைப் பல்கலைக் கழகம் நேற்று கையெழுத்திட்டது.

தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவனமான பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட், லண்டனில் பட்ட மேற்படிப்புகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காக சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூர கல்வி நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன், பிரிட்டிஷ் தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவன இயக்குனர் முகமது பார்மர் ஆகிய இருவரும் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா செனட் அரங்கில் நேற்று கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது:

சென்னைப் பல்கலைக் கழகம் பிரிட்டிஷ் தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் நமது மாணவர்கள் லண்டன் சென்று பட்ட மேற்படிப்புகள் படிக்கலாம்.

மூன்று ஆண்டு பட்டப் படிப்பான எம்.எஸ்சி., எம்.பி.ஏ., படிக்கலாம். இந்தப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 45 சதவீதம் வரையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

லண்டனில் சென்று படிப்பதன் மூலம் திறமையானவர்களாக உருவாகி, அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை உடனடியாகப் பெறலாம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூர கல்வி இயக்ககம் இதற்கான ஏற்பாடுகளையும், மாணவர்களுக்கான உதவிகளையும் செய்து தரும்.

தரமான கல்வி என்ற நம்பிக்கையுடன் சென்று மாணவர்கள் மேற்படிப்பு பட்டங்கள் பெறலாம்.

இதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது.

கல்வித் தகுதி அடிப்படையில் மாணவர்களை சென்னைப் பல்கலைக் கழகம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும்.

வணிக சட்டம், மனித வள மேம்பாடு, மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப பட்டப் படிப்புகள் இதில் உள்ளது.

இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களிலேயே முதன் முறையாக சென்னைப் பல்கலைக் கழகம் தான் இந்த ஏற்பாடுகளை செய்து தருகிறது.

இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

பிரிட்டிஷ் தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவன இயக்குனர் முகமது பார்மர் கூறுகையில், "இந்தியாவில் எந்தப் பல்கலைக் கழகமும் கல்லூரியும் இது போன்ற முயற்சிகள் எடுத்ததில்லை.

மூன்று ஆண்டு பட்டப்படிப்புகளை லண்டனில் படிக்கலாம். நிதியியல், மேலாண்மை, இகாமர்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

இந்தப் படிப்பிற்குக்கல்வி உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக்கான படிப்பு செலவு ஐந்தாயிரத்து 500 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வரை) செலவாகும்.

இந்தப் படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

0 comments: