]]
Showing posts with label சென்னை பல்கலை. Show all posts
Showing posts with label சென்னை பல்கலை. Show all posts

Friday, August 31, 2007

மாணவ-மாணவிகள் இங்கிலாந்தில் படிப்பதற்கான தகவல் மையம்

மாணவ-மாணவிகள் இங்கிலாந்தில் படிப்பதற்கான தகவல் மையம்

சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது

மாணவ-மாணவிகள் நலன் கருதி, இங்கிலாந்தில் படிப்பதற்கான தகவல் மையம் சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை துணைவேந்தர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி நிறுவனமும் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் இன்ஸ்டிடிïட் ஆப் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனமும் அண்மையில் ஒரு ஒப்பந்தம் செய்தன. அந்த ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து கல்வி நிறுவனத்தின் மண்டல அலுவலகத்தை திறந்து அதன்மூலம் மாணவர்களின் படிப்புக்கு தேவையான தகவல்களை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த புதிய மையம் சேப்பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக அஞ்சல்வழிக்கல்வி நிறுவன கட்டிடத்தின் 2-வது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து கல்வி நிறுவனத்தில் உள்ள பல்வேறு படிப்புகள், மாணவர் சேர்க்கை முறை, கட்டண விவரம், கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, விசா நடைமுறை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவ-மாணவிகள் எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மையத்தை சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் எம்.ரெங்கநாதம், அஞ்சல்வழிக்கல்வி இயக்குனர் ஜி.மோகன்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பற்றிய வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கையும் துணைவேந்தர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் இங்கிலாந்து செல்வதற்கான விசா நடைமுறைகள் குறித்து சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் துணைத்தலைவர் கர்த்தார் சிங் விளக்கிக் கூறினார்.

வெளிநாட்டில் படிக்க தேவையான அடிப்படை விஷயங்கள், வெவ்வேறு படிப்புகள், அவற்றுக்கான அட்மிஷன் முறை, கல்வி கட்டணம், வங்கிக்கடன் உதவி, வேலைவாய்ப்புகள் பற்றி பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூப் ஆப் டெக்னாலஜி இயக்குனர் முகமது பார்மர் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் ஏராளாமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த வழிகாட்டி கருத்தரங்கம் இன்றும், நாளையும் நடக்கிறது.

Wednesday, August 29, 2007

பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் திறப்பு

சென்னை பல்கலையில் பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் திறப்பு

சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இகாமர்சின் மண்டல அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.


பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இ-காமர்ஸ் கல்வி நிறுவனத்தில் (பி.ஐ.டி.இ.,) எம்.எஸ்.சி., நவீன தொழில்நுட்பம், எம்.பி.ஏ., நவீன நிர்வாகம், எம்.பி.ஏ., மருத்துவ மேலாண்மை உள்ளிட்ட ஒரு வருட முதுநிலை பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் பி.ஐ.டி.இ., மற்றும் சென்னை பல்கலைக் கழகம் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இதையடுத்து பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் சென்னை பல்கலைக் கழகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தை சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். பி.ஐ.டி.இ., கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சேர்வதற்கும், விசா மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கும் சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தில் உள்ள பி.ஐ.டி.இ., மண்டல அலுவலகம் உதவும்.

துணைவேந்தர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், 'சென்னை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி மையத்தின் மூலமாக சேரும் மாணவர்களுக்கு பி.ஐ.டி.இ., முதுநிலை பட்டப் படிப்பில் 45 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்' என்றார்.

பி.ஐ.டி.இ., முதல்வர் மொகமது பர்மர், சென்னை பல்கலைக் கழக பதிவாளர் ரங்கநாதம், தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குனர் மோகன்ராம், பிரிட்டிஷ் கவுன்சில் துணைத்தலைவர் கர்தார் சிங் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tuesday, July 17, 2007

லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்னை பல்கலை புது ஒப்பந்தம்

லண்டனில் மேற்படிப்பு படிக்க சென்னை பல்கலை புது ஒப்பந்தம்

சென்னை : தமிழக மாணவர்கள் லண்டனில் சென்று படிக்கும் வசதியை சென்னைப் பல்கலைக் கழகம் செய்து தருகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(எம்.ஓ.யு.,) சென்னைப் பல்கலைக் கழகம் நேற்று கையெழுத்திட்டது.

தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவனமான பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட், லண்டனில் பட்ட மேற்படிப்புகளை ஆரம்பித்துள்ளது.

இதற்காக சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூர கல்வி நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன், பிரிட்டிஷ் தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவன இயக்குனர் முகமது பார்மர் ஆகிய இருவரும் சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா செனட் அரங்கில் நேற்று கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தம் குறித்து சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமச்சந்திரன் கூறியதாவது:

சென்னைப் பல்கலைக் கழகம் பிரிட்டிஷ் தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் நமது மாணவர்கள் லண்டன் சென்று பட்ட மேற்படிப்புகள் படிக்கலாம்.

மூன்று ஆண்டு பட்டப் படிப்பான எம்.எஸ்சி., எம்.பி.ஏ., படிக்கலாம். இந்தப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 45 சதவீதம் வரையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

லண்டனில் சென்று படிப்பதன் மூலம் திறமையானவர்களாக உருவாகி, அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை உடனடியாகப் பெறலாம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலை தூர கல்வி இயக்ககம் இதற்கான ஏற்பாடுகளையும், மாணவர்களுக்கான உதவிகளையும் செய்து தரும்.

தரமான கல்வி என்ற நம்பிக்கையுடன் சென்று மாணவர்கள் மேற்படிப்பு பட்டங்கள் பெறலாம்.

இதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது.

கல்வித் தகுதி அடிப்படையில் மாணவர்களை சென்னைப் பல்கலைக் கழகம் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும்.

வணிக சட்டம், மனித வள மேம்பாடு, மேலாண்மை மற்றும் தொழில் நுட்ப பட்டப் படிப்புகள் இதில் உள்ளது.

இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களிலேயே முதன் முறையாக சென்னைப் பல்கலைக் கழகம் தான் இந்த ஏற்பாடுகளை செய்து தருகிறது.

இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

பிரிட்டிஷ் தொழில் நுட்பம் மற்றும் இகாமர்ஸ் கல்வி நிறுவன இயக்குனர் முகமது பார்மர் கூறுகையில், "இந்தியாவில் எந்தப் பல்கலைக் கழகமும் கல்லூரியும் இது போன்ற முயற்சிகள் எடுத்ததில்லை.

மூன்று ஆண்டு பட்டப்படிப்புகளை லண்டனில் படிக்கலாம். நிதியியல், மேலாண்மை, இகாமர்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் விருப்ப பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

இந்தப் படிப்பிற்குக்கல்வி உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம். ஓராண்டுக்கான படிப்பு செலவு ஐந்தாயிரத்து 500 பவுண்ட்ஸ் (இந்திய மதிப்பில் மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வரை) செலவாகும்.

இந்தப் படிப்பு முடித்தவர்களுக்கு அதிகளவு சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

Saturday, June 30, 2007

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு


சென்னை பல்கலைக்கழக முதுகலை மற்றும் தொழிற்படிப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.


இதுகுறித்து சென்னை பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதுகலை செமஸ்டர் மற்றும் பி.எட்., எம்.எட்., சட்டம் தவிர்த்த தொழில்கல்வி பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படுகின்றன.


இதனை சென்னை பல்கலையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இப்படிப்புகளில் மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 15 நாட்களுக்குள் " பதிவாளர், சென்னை பல்கலைக்கழகம், சென்னை' என்ற பெயரில் 650 ரூபாய்க்கான டி.டி., எடுத்து விண்ணப்பிக்கவும்.

சென்னை பல்கலை இணையதளம்: www.unom.ac.in

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 15, 2007

சென்னை பல்கலையில் புத்தக கண்காட்சி

சென்னை பல்கலையில் புத்தக கண்காட்சி


சென்னை : சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மாதம் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சி நேற்று துவங்கியது. இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன.

சென்னைப் பல்கலைக் கழக பதிப்புத் துறை சார்பில் பல்கலைக் கழக 150வது ஆண்டை முன்னிட்டு நேற்று முதல் ஜூலை 16ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியை சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று துவக்கி வைத்தார். கண்காட்சியில் இடம்பெறும் புத்தகங்கள் 50 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன. சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட 16 புத்தகங்கள் 35 சதவீத சலுகை விலையில் விற்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், இசை, அகழ்வாராய்ச்சி, சட்டம், திருக்குறள் ஆய்வுகள், தத்துவம், சமயம், அகராதிகள் என 241 புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இப்புத்தகக் கண்காட்சியை பல்வேறு மாணவர்களும், பொதுமக்களும் பார்வையிடுவதுடன், தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். ""சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டை முன்னிட்டு 150 புத்தகங்கள் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 16 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வருகிற செப்டம்பர் மாதம் மேலும் 46 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளன,'' என பல்கலைக் கழக துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.