]]

Monday, August 20, 2007

6,102 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

வேலை வாய்ப்பக சீனியாரிட்டிப்படி 6,102 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
- கல்வி அமைச்சர் தகவல்

"இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியான 6 ஆயிரத்து 102 ஆசிரியர் பணியிடங்கள் 1:1 என்ற அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும்'' என்று கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்புகள் வரை தேவை அடிப்படையில் 7 ஆயிரத்து 979 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் 1:1 என்ற அடிப்படையில் தேர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேர்முகத் தேர்வுக்கு வந்த 5 ஆயிரத்து 98 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முதல்வர் கருணாநிதியால் விரைவில் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மீதமுள்ள 2 ஆயிரத்து 881 பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கல்வியாண்டில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 ஆயிரத்து 102 பணியிடங்கள் காலி ஏற்பட்டன. இப்பணியிடங்களில் பதவி உயர்வு அளித்த பின்னர் மீதமுள்ளவைகளக்கு 1:1 என்ற விகிதாச்சாரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் பெற்று நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடக்கக் கல்வியில் ஏற்பட்டுள்ள 2 ஆயிரத்து 683 பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இதே முறையில் நிரப்பப்படும்.

7 ஆயிரத்து 223 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் பட்டியல் பெற்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களால் நியமன உத்தரவுகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 comments: