]]

Tuesday, August 28, 2007

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசியுடன் போலியோ சொட்டு மருந்து

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசியுடன் போலியோ சொட்டு மருந்து
இந்த ஆண்டு வழங்க நடவடிக்கை

ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு இந்த ஆண்டு மூளைக்காய்ச்சல் தடுப்பூசியுடன், போலியோ சொட்டு மருந்தும் வழங்க சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.


புனித மெக்காவில் உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கூடுவர் என்பதால், அவர்கள் பயணம் மேற்கொள்ளும்போது மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

இதனை சவுதி அரேபிய அரசே வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு இந்த தடுப்பூசியை இலவசமாகவே வழங்குகிறது. இந்த ஆண்டு நவம்பரில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

மாநில ஹஜ்குழு உறுப்பினர் அலாவுதீன் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், ஹஜ் கமிட்டிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்த ஆண்டு ஆக. 30 முதல் செப். 1ம் தேதி வரை பல்வேறு தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட உள்ளன.

வயது மற்றும் தடுப்பூசி அளிக்கப்பட்ட தன்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பயணிகள் அனைவருக்கும் சவுதி அரேபியாவிற்கு புறப்படும் முன் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சவுதி அரேபிய அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே தமிழ்நாட்டில் இருந்து செல்ல இருக்கும் புனித பயணிகள் அனைவருக்கும் மூளைக்காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி போடப்படவிருக்கும் அதேதினம் மற்றும் அதே மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க இக்குழு உத்தேசித்துள்ளது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி கூறுகையில், "போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே வழங்கப்படும்' என்றார்.

0 comments: