]]

Friday, August 24, 2007

ஹஜ் பயணிகளுக்கான அரசு உதவி தொகை குறைக்கப் படாது

ஹஜ் பயணிகளுக்கான அரசு உதவி தொகை குறைக்கப்படாது
மத்திய அரசு அறிவிப்பு

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவி தொகையை குறைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு `ஹஜ்' புனித பயணம் செல்லும் முஸ்லிம்களுக்காக ஆண்டு தோறும் அரசு சார்பில் மானியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை நிறுத்த வேண்டும் என்று அலாகாபாத் ஐகோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அலாகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இது குறித்து டெல்லி மேல்சபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. `ஹஜ்' பயணத்துக்கான மானியத்தை படிப்படியாக குறைக்குமாறு சிவசேனா எம்.பி., மனோகர் ஜோஷி யோசனை தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி கூறியதாவது:-

இந்த பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டு விசாரணையில் உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும். இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்போது தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்.

`ஹஜ்' பயணிகளுக்கான அரசு உதவி தொகையை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. அதே நேரத்தில், விமான கட்டண உயர்வு மற்றும் அதிகரித்து வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு தக்க வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதலாக பயணிகளை `ஹஜ்' யாத்திரைக்கு அனுப்புவதில் இந்தியா எந்த முடிவும் எடுக்க முடியாது. கூடுதல் பயணிகளை அனுமதிப்பது குறித்து சவுதி அரேபிய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.

அந்த நாட்டை பொறுத்தவரை ஒரு நாட்டில் 10 லட்சம் முஸ்லிம்கள் இருந்தால் ஆயிரம் பேருக்கு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி இந்தியாவில், 14.70 கோடி முஸ்லிம்கள் இருப்பதால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கி உள்ளது.

எனினும், மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த அனுமதி இந்த ஆண்டும் தொடரும். இந்த ஆண்டு இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் `ஹஜ்' யாத்திரை செல்வதற்கு விண்ணப்பித்து உள்ளனர்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

0 comments: