]]

Wednesday, September 26, 2007

பாடநூல்கள்... இனி 'ஆன்லைனில்'

பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இனி 'ஆன்லைனில்' பார்க்கலாம்

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது.

அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்களை வழங்குகிறது.

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில் பள்ளி கல்வி துறைச் செயலர் குற்றாலிங்கம் தலைமையில் நடந்தது.

தமிழ்நாட்டுப் பாடநூல் கழக தலைவர் ஹேமந்த்குமார் அனைவரையும் வரவேற்றார். அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.

இணைய தளத்தை துவக்கி வைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

பிளஸ் 2 வரையிலான 502 பாட தலைப்புகளில் தொழிற் கல்வி நீங்கலாக 322 பாட தலைப்புகளும், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது, மலையாளம் போன்ற சிறுபான்மை பாட நூல்களும் ரூ. 50 லட்சம் செலவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த 'டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐந்தாண்டுக்கு ஒரு முறை மற்றும் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்கள் உடனுக்குடன் இணைய தளத்தில் வெளியிடப்படும்.

ஆயிரத்து 180 மேனிலைப் பள்ளிகள், ஆயிரத்து 500 உயர்நிலைப் பள்ளிகளுக்கு இணையதளத்துடன் கூடிய கம்ப்யூட்டர் வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

0 comments: