]]
Showing posts with label கோரிக்கை. Show all posts
Showing posts with label கோரிக்கை. Show all posts

Sunday, September 23, 2007

புதுச்சேரியிலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு

அரசுக்கு மா.கம்யூ., கோரிக்கை

தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து அக்கட்சியின் செயலாளர் பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடாக தலா 3.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. அதைப்போல புதுச்சேரி மாநிலத்திலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு உறுதியான விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மா. கம்யூ., பிரதேச செயற்குழு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.

இடதுசாரிகளின் கோரிக்கையினை ஏற்று அமைக்கப்பட்ட ராஜேந்திர சச்சார் தலைமையிலான குழு இஸ்லாம் மக்களின் சமூக பொருளாதார மற்றும் வாழ்நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இஸ்லாம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சிபாரிசுகளை சச்சார் குழு அறிக்கை அளித்துள்ளது.

சச்சார்குழு பரிந்துரையை அமுலாக்க மா. கம்யூ., நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் உரிய ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேலும், சமூக நலத்திட்டங்களை வழங்கவும் அடிப்படை வசதிகளை அளிக்கவும் உரிய நடவடிக்கை வேண்டும்.

கிருஸ்தவ சிறுபான்மையினரும் நீண்ட காலமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

ஆகவே, தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Sunday, August 19, 2007

கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை பெயரிட கோரிக்கை

கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை பெயரிட கோரிக்கை

பரங்கிப்பேட்டை : கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை பெயர் வைக்க கலெக்டருக்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முகமது யூனுஸ் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:

கடலூர் மாவட்டம் ரெட்டியார்பேட்டை, புதுக்குப்பம் பகுதியில் அரசு சார்பில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுகிறது. அந்த துறைமுகத்திற்கு சிலம்பிமங்கலம் துறைமுகம் என பெயர் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

புதுக்குப்பத்திற்கு மிக அருகில் உள்ள பழமை வாய்ந்த கப்பல் கட்டும் துறைமுகத்திற்கு பரங்கிப்பேட்டை துறைமுகம் என பெயர் வைக்க வேண்டும்.

பழைய துறைமுக நகரமான பரங்கிப்பேட்டை போர்த்துகீசியர்கள் ஆட்சி காலத்தில் போர்ட்நோவோ என்ற பெயரில் இருந்தது. நீண்ட வரலாறுகளை உள்ளடக்கிய பழமை வாய்ந்த நகரமாகும். அதனால் பரங்கிப்பேட்டையை துறைமுகமாக அறிவிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்

Sunday, July 22, 2007

பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் மீன்பிடி துறைமுகம் கட்டித் தர கோரிக்கை

பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் மீன்பிடி துறைமுகம் கட்டித் தர கோரிக்கை


பரங்கிப்பேட்டை அருகே அன்னங்கோயில் பகுதியில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பரங்கிப்பேட்டையில் ஏராளமான கடற்கரை மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடலில் பிடிக்கும் மீன்களை அன்னங் கோயில் பகுதிக்கு கொண்டு வந்து அங்குள்ள வியாபாரிகளிடம் கொடுக்கின்றனர்.

அந்த மீன்கள் கெட்டு போகாதாவறு பதப்படுத்தி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இதனால் அன்னங் கோயில் பகுதி வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக உள்ளது. ஆனால் இங்கு இதுவரை மீன்பிடி துறைமுகம் இல்லை. இது குறித்து பலமுறை மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சுனாமியின் போது இந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் மீன்பிடி துறைமுகம் கட்டித் தரக் கோரி மீனவர்கள் கோரிக்கை விடுத்தபோது ஆசிய வங்கி நிதியுதவியுடன் கட்டித்தர ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆனால் இதுவரை மீன்பிடி துறைமுகம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மீனவர்கள் பயன்பெறும் வகையில் அன்னங்கோயில் பகுதியில் விரைவில் மீன்பிடி துறைமுகம் கட்டித் தர ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.