]]

Tuesday, July 17, 2007

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 15 நாள்கள் மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு 15 நாள்கள்
மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி முகாம்

கடலூர், ஜூலை 17:

கடலூர் மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் 15 தினங்கள், குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போடப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 2003 முதல் 2006 வரை ஆண்டுதோறும் மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டு தலா ஒருவர் இறக்க நேரிட்டது. இதனைத் தடுக்க 1 முதல் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 8,16,944 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி முகாம்கள் 23-ம் தேதி தொடங்கி 15 தினங்களுக்கு நடைபெறும்.

சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மீரா தலைமையில் பணியாளர்களைக் கொண்ட 10 முதல் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபடும். நாளொன்றுக்கு 300 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

தடுப்பூசி போடுவதால் எவ்வித பாதிப்பும் வராது. லேசான ஜுரம், தலைவலி, வீக்கம் ஏதேனும் ஏற்பட்டால் மருத்துவக்குழு உடனே சிகிச்சை அளிக்கும்.

கடுமையான ஜுரம், மஞ்சள் காமாலை நோய் கண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடுவதற்கு, பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

0 comments: