மத்திய அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
டிப்ளமா, பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் சார்பில் மதுரை லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் செப்.28ம் தேதி 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது. இதில் 2,500 பேர் உடனடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுகுறித்து வாரிய இயக்குனர் அய்யாக்கண்ணு கூறியதாவது:
இந்நிறுவனம் பொறியியல் பட்டம், பொறியியல் டிப்ளமா மற்றும் பிளஸ் 2 (தொழிற்கல்வி) பயின்ற மாணவர்களுக்கு ஓராண்டு செயல்முறைப் பயிற்சியினை மாத உதவித் தொகையுடன் வழங்குகிறது.
மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் பயிற்சியளித்து வேலைவாய்ப்பினை அளிக்கிறது.
தென்மாவட்ட மாணவர்கள் நலன்கருதி வாரியம் சார்பில் மதுரை அழகர்கோயில் கிடாரிபட்டியில் உள்ள 'லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி'யில் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்கு 'ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்' நடக்கிறது.
இதில் டி.வி.எஸ்., குரூப், சக்தி குரூப், ஸ்பிக் ஜெல் இன்டஸ்டிரியல் கன்ஸ்சல்டன்ட், நோகியா உட்பட 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கின்றனர்.
இதில் 1500 பொறியியல் டிப்ளமா மற்றும் 1000 பிளஸ் 2 (தொழிற்கல்வி) மாணவ, மாணவர்கள் உடனடியாக தேர்வாகின்றனர்.
டிப்ளமா, பிளஸ் 2 படித்து மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டோர் இதில் கலந்து கொள்ளலாம்.
ஏற்கனவே இச்சலுகையை அனுபவித்தவர் கலந்து கொள்ள இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி முதல்வர் சேதுபதி கூறியதாவது:
முகாமில் கலந்து கொள்வோர் செப்.28ம் தேதி காலை 9.30 மணிக்குள் கல்லூரியில் இருக்க வேண்டும்.
கல்லூரி சார்பில் மேலூர், மத்திய, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து இலவசமாக பஸ் இயக்கப்படுகிறது.
அரசு டவுன் பஸ் வசதியும் (கட்டணம் உண்டு) செய்யப்பட்டுள்ளது.
அசல் கல்விச் சான்றுகள், சுய குறிப்பு மூன்று நகல்களுடன் மாணவர்கள் வர வேண்டும்.
செப்.21ம் தேதிக்குள் சுய குறிப்புடன் 'இயக்குனர், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம், 4வது குறுக்குத் தெரு, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-13'
அல்லது
'முதல்வர், லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லூரி, கிடாரிபட்டி, அழகர்கோயில், மதுரை 625 301' என்ற விலாசத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.
0 comments:
Post a Comment